திருவனந்தபுரம்: கேரளாவின் விய்யூர் மத்திய சிறைக் கைதிகள் தயார் செய்யும் பிரியாணியை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்ய, பிரபல ஆன்லைன் உணவு சேவை நிறுவனமான ஸ்விக்கியுடன்(swiggy) ஒப்பந்தம் செய்துள்ளது சிறை நிர்வாகம்.
ஏற்கனவே, சிறைக் கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி மற்றும் பிரியாணி போன்றவற்றை Freedom Food Factory மூலமாக விற்பனை செய்து வந்தாலும், ஆன்லைன் முறையில் களத்தில் இறங்குவது இதுதான் முதல்முறை.
முதற்கட்டமாக, ரூ.127 க்கு ஒரு காம்போ பேக் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த காம்போ பேக்கில் 300 கிராம் பிரியாணி சோறு, ஒரு வறுத்த சிக்கன் கால் துண்டு(leg piece), 3 சப்பாத்திகள், ஒரு கப் கேக், சாலட், ஊறுகாய், 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் மற்றும் வாழை இலை ஆகியவை அடக்கம்.
கடந்த 2011ம் ஆண்டு முதலே, இந்த சிறையின் கைதிகள் தயாரிக்கும் உணவு விற்பனை நடைபெற்று வருகிறது. முதன்முதலில் சப்பாத்திதான் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஜெயில் உணவு விலை மலிவாகவும், தரம் அதிகமாகவும் இருப்பதால், மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.