திருவனந்தபுரம்
கேரள சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் அக்கூட்டணி 3 தொகுதிகளை இழந்துள்ளன.
வரும் 6 ஆம் தேதி அன்று கேரள சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தைப் போல் இங்கும் ஒரே கட்டமாக மாநிலத்தில் உள்ள 140 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட், மற்றும் பாஜக என மூன்று அணிகள் களத்தில் உள்ளன.
இங்கு வேட்பு மனு பரிசீலனையின் போது தலசேரி, குருவாயூர் மற்றும் தேவிகுளம் ஆகிய 3 தொகுதிகளில் பாஜக கூட்டணி உறுப்பினர்களின் மனு நிராகரிக்கப்பட்டன. இரு தொகுதிகளில் பாஜகவும் தேவிகுளம் தொகுதியில் அதிமுகவின் தனலட்சுமியும் வேட்பு மனு அளித்திருந்தனர்.
மேலும் இத்தொகுதிகளில் இக்கட்சியினர் அளித்திருந்த டம்மி வேட்பாளர்களின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இந்த முடிவை எதிர்த்து தலசேரி வேட்பாளர் ஹரிதாஸ், குருவாயூர் வேட்பாளர் நிவேதிதா சுப்ரமணியம் மற்றும் தேவிகுளம் வேட்பாளர் தனலட்சுமி ஆகியோர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
அதை விசாரித்த கேரள உயர்நீதிமன்றத்தில் தேர்தல் மனு அளித்த பிரமாண பத்திரத்தில் வேட்புமனு பரிசீலனையில் அதிகாரிகள் முடிவே இறுதியானது எனவும் 3 வேட்புமனுக்களும் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டது. இதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு இந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.
இதனால் தற்போது பாஜக – அதிமுக கூட்டணியில் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே அக்கூட்டணி 3 தொகுதிகளை இழந்துள்ளது. தலசேரியில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் 22 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். எனவே பாஜக தனக்கு இங்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கருதி வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.