வயநாடு
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கேரள வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
கேரளாவில் உள்ள வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள் முற்றிலுமாக உருக்குலைந்தன. இந்த இயற்கையின் கோரத்தாண்டவத்தால் 400 -க்கும் மேற்பட்டோர் பலியாகி 300 க்கும் மேற்பட்டோர் மாயமானார்கள். அவர்களை தேடும் பணியில் ராணுவ வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார், தன்னார்வலர்கள் என 11 பேர் கொண்ட குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
கடந்த 10 நாட்கள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவத்தின் முப்படை வீரர்கள் நடத்திய தேடுதல் பணிஐ கடந்த 9 ஆம் தேதி முடித்துக் கொண்டு திரும்பினர். ஆனால் மாயமான 100 க்கும் மேற்பட்டவர்களை கண்டுபிடிக்க வேண்டி இருப்பதால் மற்ற பிரிவுகளை சேர்ந்த மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் உதவியுடன் கடந்த 9-ம் தேதி முதல் தேடுதல் பணிகள் நடந்து வருகிறது
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை கேரள வங்கி தள்ளுபடி செய்துள்ளது. கேரள வங்கி என்பது கேரள மாநில அரசிற்கு சொந்தமான கூட்டுறவு வங்கியாகும். கேரள மாநிலம் முழுவதும் கிளைகள் உள்ள இந்த வங்கிக்கு வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலையிலும் ஒரு கிளை உள்ளது.
சூரல்மலை கிளையில் கடன்பெற்று, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர், உடமைகளை இழந்தோர், வீடுகளை இழந்தோரின் கடன்களை தள்ளுபடி செய்வதாக கேரள வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே கேரள வங்கி, முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கியதுடன் வங்கியின் ஊழியர்கள் தங்களின் 5 நாள் சம்பளத்தை முதல்வரின் பேரிடர் நிதிக்கு வழங்கியுள்ளனர்.