தோட்டத்தில் சிறுமி ஒருத்தி பூக்களை பறித்த விவகாரம் ஒரு கிராமத்தில் புயலை ஏற்படுத்திய சம்பவம் இது.
ஒடிசா மாநிலம் தென்கனால் மாவட்டத்தில் உள்ள கென்சியோ கேட்டனி என்ற கிராமத்தில் 700 குடும்பங்கள் உள்ளன.
அந்த ஊரில் உயர் சாதியை சேர்ந்த ஒருவர் தோட்டத்தில் பூத்துக்குலுங்கிய மலரை , தலித் சிறுமி பறித்துள்ளார்.
தோட்டத்து உரிமையாளர் விவகாரத்தை கிராம பஞ்சாயத்துக்கு கொண்டு போனார்.
பஞ்சாயத்தில், தலித் சிறுமியின் ‘’தவறு’’க்கு அவளது தந்தை மன்னிப்பு கேட்ட நிலையில், அங்கு வசிக்கும் 40 தலித் குடும்பங்களை ஊரில் இருந்து ஒதுக்கி வைத்தார், அங்குள்ள நாட்டாமை.
உள்ளூர் கடையில் 40 குடும்பத்துக்கும் மளிகை சாமான் கொடுக்க கூடாது, ஊரில் யாரும் அவர்களுடன் பேசக்கூடாது, எந்த நிகழ்ச்சிக்கும் அவர்களை அழைக்க கூடாது என்பவை, அந்த தீர்ப்பின் அம்சங்கள்.
தகவல் அறிந்து துணை ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள், அந்த கிராமத்துக்கு படை பரிவாரங்களுடன் திரண்டு வந்தனர்.
அதிகாரிகள் நடத்திய இன்னொரு பஞ்சாயத்தில் , இந்த விவகாரத்துக்கு சுமுக தீர்வு எட்டப்பட்டது.
அதிகாரிகள் நிர்ப்பந்தம் காரணமாக, நாட்டாமை தனது தீர்ப்பை மாற்றி எழுதினார்.
ஊரில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட ஒடுக்கப்பட்டோர், மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
-பா.பாரதி.