புதுடெல்லி: தனக்கு முதல்வராக இருக்க வேண்டுமென்ற ஆசையில்லை எனவும், அதேசமயம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்.
டெல்லி சட்டசபையிலுள்ள 70 இடங்களுக்கான தேர்தல் பிப்ரவரி 8ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக தற்போதைய ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகள் மோதுகின்றன.
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற கெஜ்ரிவால் பேசியதாவது, “மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக தேர்தலில் நிற்கிறேனே ஒழிய, எனக்கு முதல்வராக இருக்க வேண்டுமென்ற ஆசையெல்லாம் இல்லை. பள்ளி மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்த எனது அரசு கடுமையாக உழைத்துள்ளது.
எங்களது சிறிய பட்ஜெட்டில், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், மொத்தம் 2 லட்சம் சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளோம். ஆனால், அதிகளவு நிதியை வைத்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஒரு கேமரா கூட பொருத்தவில்லை. நிர்பயா நிதி முழுவதையும் அமித்ஷாதான் வைத்துள்ளார்” என்று பேசினார் கெஜ்ரிவால்.