டெல்லி

டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கவிதாவின் நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

அமல்லாக்க்த்துறை டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்படப் பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கெஜ்ரிவாலுக்கு இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 9 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

சம்மனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார் கடந்த மாதம் 20 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கெஜ்ரிவால் மீதான சட்ட நடவடிக்கைக்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.  எனவே, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை கடந்த மாதம் 21ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. தற்போது கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய நீதிமன்றக் காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் திகார் சிறையில் உள்ள அவர் இன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் காணொலி காட்சி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். கெஜ்ரிவாலை மேலும் விசாரிக்க வேண்டியுள்ளதால் அவரது நீதிமன்றக் காவலை நீட்டிக்கவேண்டுமென அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கோரிக்கையை ஏற்ற டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. அதாவது கெஜ்ரிவாலுக்கு வரும் மே 7ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளான கவிதாவின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அவருக்கும் மே 7ம் தேதி வரை நீதிமன்றக் காவலை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.