சென்னை: கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வுப்பணியை வரும் 18-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தொல்லியல்துறை மேற்கொண்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் 3 கட்ட அகழாய்வு பணிகளை மத்திய தொல்லியல் துறையும், அதனை தொடர்ந்து 4 முதல் 7ம் கட்டம் வரையிலான அகழாய்வு பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறையும் மேற்கொண்டனர். 7ம் கட்ட அகழாய்வு பணியானது 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்தது.
இந்த அகழாய்வுகளின்போது, சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டன. தொடர்ந்து, 8ம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த 2023ம் ஆண்டு தொடங்கி, செப்டம்பர் வரை பணி நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக கீழடி ஒன்பதாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றது. இதில், 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட நகர நாகரிகம் இருந்தது கண்டறியப்பட்டது. அதேபோல, இந்த அகழ்வாய்வின்போது, 190 செ.மீ ஆழத்திலிருந்து வெளிக்கொணரப்பட்ட பானை ஓடுகளை வகைப்படுத்தும் பொழுது, உடைந்த நிலையில் சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பின் தலைப்பகுதி ஒன்று கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து, அருகில் உள்ள கொந்தகை, அகரம்,மணலூர் உள்ளிட்ட இடங்களிலும் அகழாய்வுகள் நடைபெற்றன.
கீழடியில் இதுவரை பல்லாயிரக்கணக்கான தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. இந்த தொல்பொருட்களை பொதுமக்கள் பார்வையிடும் வகையில், உலகத் தரம் வாய்ந்த கீழடிஅகழ் வைப்பகம் அமைக்கப்பட்டது. இதை தினமும் ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கீழடியில் 10-ம்கட்ட அகழாய்வு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு, கீழடிஉள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ரூ.5 கோடியைஅரசு ஒதுக்கியது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், கீழடியில் அகழாய்வு பணியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வுப் பணியை வரும் 18-ம்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகத் தொடங்கிவைக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை தொல்லியல் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
9ம் கட்ட அகழாய்வு பணி: கீழடியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பின் தலை – பழங்கால எடை கல் கண்டெடுப்பு!