சென்னை:

”ஜம்மு – காஷ்மீர் பகுதியை தொடர்ந்து பதற்றத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக, அங்குள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களை தொடர்ந்து சிறையில் அடைப்பது, பாஜகவின் பச்சை சுயநலமே தவிர நேர்மையான நடவடிக்கையல்ல”  என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.

காஷ்மீரில் அடைக்கப்பட்டிருக்கும் ஜனநாயகக் கதவுகளைத் திறந்து விட்டு, அனைத்துத் தரப்பு மக்களும் எவ்விதத் தடையுமின்றி ஜனநாயகக் காற்றை சுவாசிக்க இடமளிப்பதுடன், புதிய புதிய காரணங்களைக் கண்டு பிடித்து காஷ்மீர் அரசியல் தலைவர்களை சிறையில் வைத்திருப்பதை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கைவிட வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து  அவர்  விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரை அடக்குமுறை சட்டமான “பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்” கீழ் கைது செய்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியிலிருந்து எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லாமல்- எந்தக் கேள்வியும் கேட்காமல் முன்னாள் முதல்வர்களையும், முக்கிய அரசியல் தலைவர்களையும்  கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருப்பது,  ஜனநாயகத்திற்கு கைவிலங்கும் கால்விலங்கும் போடும் கொடுமையான நிகழ்வு ஆகும்.

ஜனநாயகத்தின் மீதும், அரசியல் சட்டத்தின் மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை எள்ளி நகையாடுவது போல் மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவது மிகவும் கவலையளிக்கிறது.

உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, காஷ்மீரத்து சிங்கம் பரூக் அப்துல்லா போன்ற தலைவர்களை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பது,  அடிப்படை உரிமைகளின் மீதும், கருத்துச் சுதந்திரத்தின் மீதும் செலுத்தப்படும் கொடூரமான அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.

ஆறு மாத சிறைக்காவல் முடிவடைந்த நிலையில், திடீரென்று மீண்டும்  கைது செய்யப்பட்டுள்ள உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள மூத்த தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட அனைத்து அரசியல் தலைவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும்; அடைக்கப் பட்டிருக்கும் ஜனநாயகத்தின் கதவுகளைத் திறந்துவிட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திரமோடியைக் கேட்டுக் கொள்கிறேன்.

பிரதமர் இந்திய நாட்டின் பிரதமர், எல்லோருக்கும் பிரதமர் – அவர் ஏதோ பா.ஜ.க.விற்காக மட்டுமே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட பிரதமர் அல்ல என்பதை நினைவூட்டுவது நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் திமுகவின் கடமை என்று கருதுகிறேன். ஆகவே இனியும் காலதாமதம் செய்யாமல்- புதிய புதிய காரணங்களை செயற்கையாகக்  கண்டுபிடித்து காஷ்மீர் தலைவர்களை சிறையில் வைத்திருப்பதை கைவிடுமாறும், காஷ்மீரில் ஜனநாயகக் காற்றை அனைத்துத் தரப்பு மக்களும், எந்தவிதத் தடையுமின்றிச் சுவாசிக்க இடமளிக்குமாறும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.