கேதாரிநாத், உத்தரகாண்ட்

உத்தர்காண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கேதாரிநாத் ஆலயம் நேற்று காலை பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கபட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலையில் அமைந்துள்ள கேதாரிநாத் ஆலயம் 1200 வருடம் பழமையானதாகும்.   இந்த கோவில் ஆதிசங்கரரால் அமைக்கப்பட்டதாகும்.   இந்தியாவின் 12 ஜோதிர்லிங்களில் இதுவும் ஒன்றாகும்.   உத்தரகாண்டில் உள்ள சார் தாம் யாத்திரா என்னும் புனிதப் பயணத்தில் இந்த கோவிலும் ஒன்றாகும்.

இந்த சார் தாம் யாத்திராவில் உள்ள மற்ற மூன்று தலங்கள் கங்கோத்ரி, யமுனோத்ரி மற்றும் பத்ரிநாத் ஆகும்.   அனைத்தும் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கார்வால் பகுதியில் அமைந்துள்ளன.   பனி படர்ந்த இமயமலையில் 3500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோவில் கோடைக்காலத்தில் மட்டுமே திறக்கப்படுகிறது.

குளிர்காலத்தில் இந்த கோவில் மூடப்படுகிறது.   அந்த நேரத்தில் கோவில் விக்ரகம் மலையின் அடியில் உள்ள உகிமட் என்னும் இடத்தில் வைத்து பூஜிக்கப்படுகிறது.   பனி உருகிய பிறகு மீண்டும் விக்ரகம் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.   தற்போது கோவில் அருகில் உள்ள பனி உருகிய போதிலும்.   கோவிலை சுற்றி உள்ள மலைப்பகுதி பனியால் மூடப்பட்டுள்ளது.

கேதாரிநாத் வெள்ளம்

இந்த கோவில் வேத மந்திரங்களுடன் நேற்று காலை 5.35 மணிக்கு திறக்கப்பட்டது.    இந்த கோவில் இந்த வருடம் 10 குவிண்டால் எடை உள்ள மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.   இந்த மலர்களை ரிஷிகேஷில் உள்ள ஒரு நிறுவனம் நன்கொடையாக அளித்துள்ளது.

 

கடந்த 2013 ஆம் வருடம் ஏற்பட்ட வெள்ளத்தினால் இந்த பகுதி கடுமையாக பாதிப்பு அடைந்தது.   ஆனால் கோவிலுக்கு எவ்வித பாதிப்பும் நிகழவில்லை.   இந்த வருடம் பக்தர்கள் இரவில் தங்க வசதியாக கொட்டகைகள் மற்றும் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.   இங்கு சுமார் 3000 பேர் தங்க முடியும்.