ஐதராபாத்: தெலுங்கானாவில், கொரோனா பாதித்தோர் குறித்து வெளியிடப்படும் ண்ணிக்கையில் எழுந்துள்ள முரண்பாடுகள், அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மோசமானதாக இருக்குமோ? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் மோசமாக பாதித்த மாநிலங்களில் தெலுங்கானா முக்கியமான ஒன்றாக இருக்கும் நிலையில், அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாநில அரசின் இரண்டு தனித்தனி பிரிவுகள், மாறுபட்ட எண்ணிக்கையை கூறுகின்றன. ஜூலை 2ம் தேதியன்று இரவு, மாநில அரசின் ஹெல்த் புல்லட்டின், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை 18570 என்று குறிப்பிட்டது.
ஆனால், தெலுங்கானாவின் சுகாதார மற்றும் அரசு இணையதளத்திலுள்ள கோவிட்-19 லைவ் டாஷ்போர்டு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை 21393 என்று காட்டியது.
அதேபோன்று, ஜூலை 1ம் தேதி நிலவரப்படி, புல்லட்டின் காட்டிய எண்ணிக்கை 17000 மற்றும் டாஷ்போர்டு காட்டிய எண்ணிக்கை 19000.
மேலும், இறப்பு எண்ணிக்கையிலும் மாறுபாடுகள் நிலவுகின்றன. ஜூலை 2 வரையான நிலவரப்படி, புல்லட்டின் காட்டிய இறந்தோர் எண்ணிக்கை 275; ஆனால் டாஷ்போர்டு காட்டிய எண்ணிக்கை 267.
மேலும், அம்மாநிலத்தில், பரிசோதனைக்கு உட்பட்டோரின் சரியான எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.