சென்னை: கவரைப்பேட்டை அருகே நடந்த ரயில் விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட உள்ளது. இந்தக் குழுவினர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்வர்.
திருவள்ளூர் அருகே கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் கவரைப்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை இரவு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுமார் 12 பெட்டிகள் வரை தடம்புரண்டது. 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மீட்பு பணியில் திருவள்ளூர் மாவட்ட அரசு அதிகாரிகள், ரயில்வே ஊழியர்கள், பேரிடர் மீட்பு குழுவினர், காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி எஸ்பிரஸ் ரயில் (12578) சரக்கு ரயில் மீது மோதி பயங்கர விபத்து பெரம்பூரில் இருந்து 7.44 அளவில் புறப்பட்ட இந்த ரயில், 8.27 மணியளவில் கவரைப்பேட்டை அருகே வந்துள்ளது தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்புறத்தில் வேகமாக வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது வேகமாக மோதியதால் ரயில் தடம் புரண்டு 2 பெட்டிகள் எரிந்தன. அவை உடனே அணைக்கப்பட்டது. மேலும், பயணிகள் விரைவு ரயிலின் 4 ஏசி பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகத் தகவல் வெளியாது. அந்த இடத்தில் மீட்பு படையினர் விரைந்து வந்து பயணிகளை மீட்டனர்.
இதைத்தொடர்ந்து, ரயில்வே ஊழியர்கள் 250 பேர், பேரிடர் மீட்புக்குழுவினர் 100 என 350 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தடம் புரண்ட ரயில் பெட்டிகளை கிரேன்கள் மூலம் அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் விபத்தில் சிக்கிய ரயிலில் பயணம் செய்த பயணிகள் மாற்று ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 4.45 மணிக்கு தர்பங்கா புறப்பட்டது. பயணிகளுக்கு உணவு, தண்ணீர் வழங்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், சார்மினார் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 18 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கபடும். திருப்பதி – புதுச்சேரி, சென்னை திருப்பதி, சூலூர்பேட்டை நெல்லூர் உள்ளிட்ட 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், விபத்து குறித்த ஆய்வு செய்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், பயணிகள் ரயில் மெயின் லைனில் செல்லாமல் லூப் லைனில் சென்றதே விபத்துக்கு காரணம் என்று தகவல் தெரிவித்துள்ளார். ரயில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பயணிகள் ரயிலை ஓட்டிச் சென்ற 2 ஓட்டுநர்கள் படுகாயமடைந்துள்ளனர். விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்புரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விபத்து காரணமாக 4 தடங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதைத்தொடர்ந்து, ரயில் விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட உள்ளது. இந்தக் குழுவினர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்வர் என்றும், ரயிலை இயக்குதல், சிக்னல், தொழில்நுட்ப கோளாறுக்கான காரணங்களை ஆராய்ந்து அதன் அறிக்கையை சமர்ப்பிப்பர். மனிதத் தவறா அல்லது தொழில்நுட்ப கோளாறுகள் காரணமா கண்டுபிடிக்கப்பட்டு, அதன்படி உயர்மட்டக் குழுவினர் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.