மலர்: ஒன்று
அரச குடும்பத்து முதலிரவு என்றால், ஆர்ப்பாட்டத்துக்கும், அலங்காரத்துக்கும் கேட்கவா வேண்டும்? மலராலேயே படுக்கை அமைத்து, மணிகளால் தோரணம் கட்டி, முத்தும், பவளமும் வாரி இறைத்து, வாசனைப் பொடிகள் புகைத்து, அந்த அறையைச் சொர்க்கமாக மாற்ற முயற்சித்திருக்கிறார்கள் அயோத்தி நகரத்து அந்தப்புர சேடிப் பெண்கள். அதில் அவர்கள் வெற்றிபெற்றதாகவே சொல்ல வேண்டும்.
சோபன அறையிலே லட்சுமணன் வரவுக்காக காத்திருக்கிறாள் ஊர்மிளா. அழகான தோற்றமுள்ளஅவளை சேடிப்பெண்கள் தாங்கள் கற்ற வித்தையைப் பயன்படுத்தி தேவதையாக மாற்றிவிட்டார்கள்.
“இளவரசியாரை இந்தக் கோலத்தில் நம் இலட்சுமணர் பார்த்தால் இன்னும் ஒரு மாதத்திற்கு சாற்றிய கதவை திறக்கவே மாட்டார்!” என்கிறாள் ஒருத்தி.
“தன் தமையன் ராமனைத் தவிர வேறு யாருக்கும் தலைவணங்காத நம் இலட்சுமணரின் தலை ஊர்மிளாவின் காலடியில் மண்டியிடும். இவள் கட்டளைக்காகக் காத்துக் கிடக்கும்!” என்கிறாள் இன்னொருத்தி.
ஊர்மிளாவுக்குக் காலில் பூசிய செம்பஞ்சுக் குழம்பைவிட அதிகச் சிவப்பாக நாணம் வந்து கன்னத்தில் படர்ந்தது.
இந்த சேடிப் பெண்கள் வெட்கம் கெட்டவர்கள். என்னவெல்லாம் பேசிவிட்டார்கள்.
“பேசாமல் இருக்க மாட்டீர்கள்!” என்றாள்.
முற்றிலும் புதிய உணர்வுகள் முளைத்துக் கிளர்ந்தன. புதிதாக குருகுலத்துக்குள் நுழைந்த மாணவியின் மனோபாவத்தில் இருந்தாள்.
அறைக்கு வெளியில் யாரோ ஒரு பாணன் மோகன ராகத்தை யாழில் இசைத்துக் கொண்டிருந்தான் ஊர்மிளாவுக்குக் காதல் உணர்வுகள் ஊறித் ததும்பின. உடல் முழுக்க மஞ்சள் நதி பாய்ந்தோடியது.
நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது.
குறிப்பிட்ட நேரம் வரை இசை மீட்டிய பாணன் போய்விட்டான். சேடிகள் சொன்ன காதல் குறிப்பும், இசை ஏற்படுத்திய நெகிழ்ச்சியும், வாசனைத் திரவியங்கள் ஏற்படுத்திய கிறக்கமும் சேர்ந்து பற்ற வைத்த காம நெருப்பு ஆவேசமாய் எரிந்தது.
லட்சுமணன் வரவேயில்லை.
ஊர்மிளாவுக்கு மனசு தவிக்கிறது. பதைபதைக்கிறது. லட்சுமணனின் தந்தை தசரதனுக்கு அறுபதனாயிரம் மனைவியர் என்று சிறு பிராயத்திலேயே கேள்விப்பட்ருக்கிறாள். பிள்ளையும் அப்படித்தான் இருப்பாரோ! முதலிரவு அன்று மனைவியைவிட யார் முக்கியமாகப் போய் விட்டார்கள்?
மனதினுள் தோன்றிய சங்கடக்கல், மெல்லமெல்ல வளர்ந்து பெருமலையானது. மனம், பாரமானது. இரவு கரைந்து விடியப் போகிற நேரத்தில் அவசர அவசரமாக வந்தான் இலட்சுமணன். ஊர்மிளா அவனைக் கண்டதும் எழுந்து நின்றாள். நாணத்தால் தலை கவிழ்ந்தாலும், ஓரக்கண்ணால் அவன் முகத்தைப் பார்க்கவே செய்தாள்.
இத்தனை அழகும், அலங்காரமும் வீணாகுவதற்கு முன் வந்துவிட்டாரே! அதிர்ஷ்டசாலிதான்.
ஆனால் இலட்சுமணன் அவள் முகத்தை எங்கே ஏறெடுத்து பார்த்தான்? பார்த்திருந்தால் அந்தப் பேரழகு அவனை பதம்பார்த்திருக்கும். ஊர்மிளைக்கு துணையாக இரவெல்லாம் காத்திருந்த காமனுக்கும் வேலை வந்நதிருக்கும்.
சில ஆடைகளை அள்ளிக் கொண்டு சரயூ நதிக்கு ஓடினான். நீராடினான், ஆடை மாற்றினான், ஈர ஆடைகளை அங்கேயேபோட்டுவிட்டு எங்கோ ஓடினான். இத்தனை காட்சிகளையும் தன் அறைக்குள் இருந்தபடியே சாளரத்தின் வழியாக பார்த்துக் கொண்டிருந்தாள் ஊர்மிளா.
இனம் புரியாத பயம் வந்து அவளை கவ்வியது.
‘இரவு எங்கே போயிருந்தார்? இத்தனை அவசரமாய் மறுபடியும் எங்கே ஓடுகிறார்? எப்போது இனி திரும்பி வரப்போகிறார்?” என்று பல கேள்விகள் முளைத்தன. ஓடுகிற சரயூ நதியையே பார்த்துக் கொண்டு நின்றாள். கண்களில் கண்ணீர் பெருகியது.
எத்தனை நேரம் அந்த நிலையில் நின்றிருப்பாளோ? சேடிப் பெண் வந்து “இளவரசியாரே! இது நீராடுகிற நேரம். வாருங்கள், தைலம் தேய்த்து விடுகிறேன்” என்றாள்.
நேற்று எழுதிய ஒப்பனை கலையாத ஊர்மிளாவைப் பார்த்த சேடிப் பெண் கண்களில் பரிதாப உணர்வு படர்ந்தது. ” முதலிரவுக்கு கூட வராமல் அங்கேயே தங்கிவிட்டாரோ இளவரசர்?” என்று அவளுக்குள்ளாகவே ஊர்மிளாவுக்கு கேட்கிற சத்தத்தில் முனகினாள்.
“அங்கே என்றால் எங்கே? யாரவள்? என்னைத் திரும்பியே பார்க்கவிடாமல் செய்கிற அளவுக்கு அவள் அப்படி என்ன பேரழகியா?”
அவளைப் பார்க்க வேண்டும் என்று மனசு தவித்தது. இப்படிப்பட்டவர்க்கு எதற்குத் திருமணம்?
சேடிப் பெண்ணிடம் விசாரிக்க அவள் மனசு இடம் தரவில்லை. கேட்டிருந்தால் இத்தனை பெரிய தவிப்பு ஊர்மிளாவுக்கு ஏற்பட்டிருக்காது.
சேடிப்பெண் முன் நடக்க, அவளைத் தொடர்ந்து நடந்தாள் ஊர்மிளா. எதிரில் சீதா வருகிறாள். கோசலையிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு வந்து கொண்டிருக்கிறாள். ஊர்மிளாவை பார்த்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை.
இவள்தான் தமக்கை என்ற பாசம் பிடர் பிடித்துத் தள்ள, “சீதா….”என்றாள்.
கலவி நேரத்தில் கன்னத்தில் ஏற்பட்ட நகக்குறியை இடது கையால், மறைத்துக் கொண்டே.. “அவசரமாக போய்க்கொண்டிருக்கிறேன் ஊர்மிளா. அவர் காத்திருப்பார்….” என்று நிற்காமல் நடக்கிறாள்.
சீதாவுக்கு தெரியும். நேற்றிரவு ஊர்மிளாவுக்கு முதலிரவு நடக்கவில்லை என்று. இலட்சுமணன் அண்ணன் எந்த நேரமும் அழைக்கலாம் என்று அவர்களுடைய அறை முகப்பில்தானே விடியவிடியக் காத்துக் கிடந்தான்!
‘நாம்தான் சந்தோஷமாக இல்லை. தமக்கையாவது கணவனோடு இன்பமாக இருக்கிறாளே’ என்றநினைப்பு ஊர்மிளாவின் துயரை ஓரளவு துடைத்தது. அத்தனை அவசரமாய் நகக்குறியை எதற்கு மறைத்தாள் என்பதுதான் புரியவில்லை. வெட்கமோ?
ஆனாலும், மனதின் ஒரு மூலையில் இடறியது.
நாட்கள் சென்றன.
அந்தப்புரத்தில் தன் அறைக்குள் அடைந்தே கிடந்தாள் ஊர்மிளா. இலட்சுமணனுக்காய் காத்திருந்து அலுத்தாள். பூக்கள் கூட அவளை சுட்டுக் பொசுக்கின.
என் கணவனை எங்காவது பார்த்தீர்களா? என்று யாரிடம் கேட்பது… அந்நியரிடம் கணவனைப் பற்றி மனைவி கேட்டுத் தெரிந்து கொள்வதைப் போல் கணவனைக் கேவலப்டுத்துகிற விஷயம் எதுவுமில்லை.
உண்மை கண்ட கனவாக உள்ளுக்குளேயே வெந்தாள்.
கணவன் வருகிறானோ இல்லையோ, ஊர்மிளாவுக்கு விருப்பமோ இல்லையோ, அரச குல வழக்கப்படி மாலை வந்தால் சேடிகள் வந்து அவளை அலங்காரப் பதுமையாக்கும் காரியத்தை செய்யத் தவறுவதில்லை.
தினம் தினம் அலங்காரம் வீணாகிக் கொண்டிருந்தது.
பல இரவுகள் வராமலே இருந்துவிடுகிற இலட்சுமணன், திடீரென ஒரு நாள் நள்ளிரவுக்கு பின் வந்து கதவைத் தட்டுவான், இவளும் ஓடிப்போய் ஆயிரம் எதிர்பார்ப்புகளோடு கதவைத்திறப்பாள். தூங்கா மணிவிளக்கு வெளிச்சத்தில் தேவதையாய்த் தெரியும் ஊர்மிளாவின் அழகை இலட்சுமணன் பருகாமல் கோட்டை விட்ட கதைதான் தினமும் நிகழும்.
இலட்சுமணன் அறைக்குள் நுழையுபோதே எப்போது வெளியேறுவோம் என்ற உத்தேசத்தில்தான் வருவான்.
வந்தவன் கட்டிய கணவன். எப்படி மறுக்கமுடியும்? உடன்படுவாள். முறுக்கம் தளர்ந்ததும் எழுந்து ஓடுவான்.
ஊர்மிளா கணவனிடம் இந்தச் சுமையை எதிர்பார்க்கவில்லை. தாம்பத்திய பந்தம் வெறும் சதையோடு என்பதில் அவளுக்கு உடன்பாடில்லை. இலட்சுமணன் அன்புக்காக ஏங்கினாள். இவன் சுரக்கிற அன்பை வேறெங்கோ கொட்டித் தீர்த்து விட்டு சம்போகத்துக்கு மட்டும் இங்கு வந்தான். அதுவும், எவரையும் உறக்கம் சொக்க வைத்து வீழ்த்தி விடுகிற இரண்டாம் சாமத்தில்.
இப்போதெல்லாம் ஊர்மிளாவுக்கு தனிமை பழக்கப்பட்டுவிட்டது.தனக்குள்ளேயே இருக்கும் இன்பத்தை எடுத்துப் புகட்ட கணவன் என்ற ஒருவன் அவசியமில்லை என்ற விஷயத்தைக் கற்றுகொண்டு விட்டாள். இதை கற்றுக் கொள்வதற்கு முன் ஊர்மிளா பட்டபாட்டை அந்த சரயூ நதி ஓரளவு அறியும்.
கணவனுக்காக கத்துக்க கிடந்ததும், அவன் தேக கதகதப்பில் யோகம் பயில நினைத்ததும் – அது ஒரு காலம். இப்போது முற்றாக மாறிவிட்டாள்.
பின்னிரவில் வந்து அவன் கதவைத் தட்டும்போது சலிப்புடன்தான் போய்கதவைத் திறக்கிறாள். ‘அங்கேயே இருந்துவிடுவதுதானே’ என்று சொல்ல நினைப்பாள். ஏனோ அது முடிவதில்லை.
கணவன் பழியாக அடைந்து கிடக்கிற இடம் தன் சகோதரி சீதாவின் அந்தப்புரம் என்று தெரிந்தபோது ஊர்மிளா ஆடிப்போனாள்.
‘எத்தனை பெரிய துரோகம் இது, சீதாவுக்குமா புத்தி இல்லை. இங்கே எங்களுடைய அந்தப்புரத்தில் உனக்கு என்ன வேலை என்று சொல்லித் துரத்துவதை விட்டு நன்றி கெட்டவள். அனாதையாய் பூமியில் கிடந்து கிடைத்தவளை என்றாவது என் சகோதரி இல்லை என்றபடி நடத்தியிருப்பேனா? என் தந்தை ஜனகன் கூட முதல் மகள் சீதா என்றுதானே கொண்டாடினார். எல்லாவற்றையும் மறந்து விட்டாளே!
கோபம் வெடித்தது.
சேடிப் பெண்ணை அழைத்தாள்.
“என் கணவர் எப்போதும் சீதாவின் அந்தப்புரத்தில் இருக்கிற விஷயத்தை ஏன் என்னிடமிருந்து மறைத்தீர்கள்?” என்றாள் கோபமாக!
“இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை இளவரசியாரே? இது நாடே அறிந்த விஷயம்தானே? தங்களுக்கு இத்தனை நாள் தெரியாமல் இருந்தது ஆச்சர்யம்தான்!” என்ற சேடிப்பெண் கண்களில் வியப்புக் காட்டினாள். ஊர்மிளாவை பரிதாபமாக நோக்கினாள்.
ஒரு சேடிப்பெண்ணின் பரிதாபத்துக்கு ஆளாகுவதை விட வேறு அவமானம் என்ன இருக்க முடியும்?
ஆறடி அழகி ஓரடி குறுகினாள்.
“நாடே அறியுமா இந்தத் கூத்தை?”
” ஆமாம், இளவரசர் சிறுபிராயத்திலிருந்தே அப்படித்தானம்மா. அவருக்கு தாய், தந்தை, கடவுள் எல்லாமே அண்ணன் இராமர்தான். உடலை விட்டு நிழல் பிரியலாம். இராமரை விட்டு இலட்சுமணர் பிரிந்து இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாது. அண்ணன் தூங்கிய பின் தூங்கி விழிக்கும் முன் எழுந்து விடுவார். கால் பிடித்து விட்டு, முதுகு சொறிந்து விட்டு அவருக்குப்பணிவிடை செய்வதைப் பாக்கியமாகக் கருதுகிறார்”.
“இப்போதுமா?”
“உம்…” என்றாள் சேடி.
“சரி, நீ போகலாம் ” என்றாள் சேடியைப் பார்த்து.
கணவனைப் பற்றி ஊர்மிளாவால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. அவர் அசடாகவே இருந்துவிட்டுப் போகட்டும். தமையன் இராமன் புத்தி சொல்லி அனுப்பலாம் அல்லவா? அவர் தன் சுகமே பெரிதென்று நினைப்பவர் போலிருக்கிறது. அதனால்தான் உடன் பிறந்தவன் என்ற பாசம் சிறிதும் இல்லாமல் அடிமையாய் நடத்துகிறார். இவரும் அதை விரும்புகிறார். அடிமைக்கு எதற்கு மனைவி?’ என்ற கேள்வி ஊர்மிளாவுக்குள் விஸ்வரூபம் எடுத்தது.
தசரதன் தனக்கு மிகப் பிரியமானவளான கைகேயியை சந்திக்கப் போவெதன்றால் மிக அதிகமாவே ஒப்பனை செய்து கொள்வான். அன்றும் அப்படித்தான். ஒப்பனையில் ஈடுபட்டிருந்தான். காதோரத்தில் நரைத்திருந்த ஒரு முடி கண்ணில்பட்டது.
தனக்கு வயதாகி விட்டதை அப்போதுதான் உணர்ந்தான். மூத்த மகன் இராமனுக்கு முடிசூட்ட முடிவு செய்தான். முரசு முழங்கியது.நாடு திருவிழாக் கோலம் பூண்டது.
சிறு வயதில் மண் உருண்டையால் இராமன் தன் கூனை அடித்ததை மறக்காத கூனி சதியில் ஈடுபட்டாள். அவள் சூழ்ச்சிக்குப் பலியான கைகேயி, பரதன் நாடாள வேண்டும். இராமன் பதிநான்கு வருடம் வனவாசம் செல்ல வேண்டும் என்று வரம் கேட்டாள். முன்பு போர்க்களத்தில் வைத்து தசரதன் தருகிறேன் என்று வாக்கு கொடுத்த வரங்கள் இரண்டும் இப்போது பயன்பட்டன.
வேறு வழியில்லை. தசரதன் சம்மதித்து விட்டான். முரசடிக்காமல் வேகமாய்ப் பரவியது. இந்தச் செய்தி. சேடி ஒருத்தி மூலம் ஊர்மிளாவின் காதுக்கும் வந்தது.
“அவரும் போகிறாராமா?”
“அப்படித்தான் பேசிக்கொண்டனர். தமையனுக்காக, தந்தை யை கொல்வதற்கே புறப்பட்டாராம் இலட்சுமணர், இராமர்தான் சாமாதானப்படுத்தினாராம். இலட்சுமணர், தாங்கள் இருக்கிற இடம்தான் எனக்கு அயோத்தி நானும் வருவேன் என்கிறாராம்.”
“இராமர் சரி என்றிருப்பார். இவர் உடனே சந்தோஷத்தால் குதித்திருப்பார்…!”
“அதை எப்படி அறிந்தீர்கள்? அப்படித்தான் நடந்தது. நீங்கள் போகப் போகிறதில்லையாமே. தனிமை கொல்லுமே அம்மா…”
ஊர்மிளா பதில் சொல்லாமல் சிரித்தாள். இனிமேல்தானா… விதேக நாட்டிலிருந்து அயோத்திக்கு என்று காலடி வைத்தாளோ… அன்றிலிருந்தே தனிமையோடுதான் வாழ்க்கை நடக்கிறது.
சேடி போய்விட்டாள்.
மாளிகையின் பின்புறம் பரந்துவிரிந்திருந்த பூத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறு குடிலுக்குச் சென்றாள் ஊர்மிளா. மிகுந்த மனச்சங்கடம் ஏற்படும்போதெல்லாம் அங்குதான் வருவாள்.
ஊர்மிளாவை அரண்மனையில் தேடிய லட்சுமணன், குடிலில் இருப்பாளோ என்று யூகித்து அங்கே வந்தான்.
மரவுரி தரித்து- கையில் வில் பிடித்தபடியே துறவு பூண்டிருந்தான். துறவிக்கு எதற்கு ஆயுதம்?
வாயிலுக்கு வெளியே நின்று, “ஊர்மிளா…” என்றான்.
இப்படி பெயர் சொல்லி அழைத்து எத்தனை நாட்கள் ஆகின்றன!
வந்தாள்.
இதென்ன கோலமென கேட்பாள் என்று எதிர்பார்த்த இலட்சுமணனுக்கு ஏமாற்றம் கிட்டியது.
“எங்களோடு நீயும் வருகிறாயா?”
“எங்கே?”
“ஆரண்யத்துக்கு.”
“எதற்கு?”
“உன் சகோதரி சீதாவும் வருகிறாள். நீ அவளுக்குப் பணிவிடை செய்ய…”
“உடன் பிறந்தவருக்கு அடிமை வேலை செய்ய நான் ஒன்றும் நீங்கள் அல்லவே!” என்றாள்.‘
இலட்சுமணன் பதில் சொல்லாமல் – திரும்பி இராமனின் அந்தப்புரத்துக்கு நடந்தான்.
‘பணிவிடையே பாக்கியம்…” என்றது அவன் வாய்.
இராமன் செல்ல – சீதை தொடர – இலட்சுமணன் பின்னால் நடந்தான்.
ஊர்மிளா நிம்மதி பரவுவதாய் உணர்ந்தாள்.
இனி, இவள் தனிமைக்கு எந்த இடையூறும் ஏற்படப் போவதில்லை. தனிமையின் சாரத்தை அணுஅணுவாக அனுபவிக்கலாம். இலட்சுமணனின் இடையூறு இருக்காது.
அயோத்தி நகரத் தெருக்களெல்லாம் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது. கூடிக்கூடி நின்று பேசுகிறார்கள்.
இன்றோடு பதிநான்கு வருடம் முடிகிறது. விடிந்தால் தந்தையின் கட்டளையை நிறேவேற்ற ஆரண்யத்துக்குப் போன இராமன் வந்து விடுவான். சீதை, இலட்சுமணன் வருவார்கள். பிள்ளைகள் வருமா தெரியவில்லை.
பதினான்கு வருடாமய் பாதுகை ஆண்ட நாட்டை மனிதன் ஆளப்போகிறான்.
இராமன் வராமல் அயோத்திக்கு வரமாட்டேன் என்று சபதம் எடுத்த பரதனும் நந்திக் கிராமத்திலிருந்து வந்து விடுவான்.
கணவன் தசரதன் இறந்த அன்றே சிரிப்பைத் தொலைத்துவிட்ட கோசலை சிரிக்கிறாள். கைகேயி, சுமித்திரைகூட சந்தோஷமாக இருக்கின்றனர்.
எல்லோரும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். ஊர்மிளாதான் எதையோ பறிகொடுத்ததுபோல் காணப்பட்டாள்.
இனி அவளுடைய தனிமை இரவு தொல்லைக்கு உள்ளாக்கப் போகிறதே. அந்த வருத்தமாகத்தான் இருக்கும்.