அமெரிக்காவில் நடைபெற்ற 6-வது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டின் சென்னையை சேர்ந்த காசிமா மூன்று பிரிவுகளில் தங்கம் வென்று மாபெரும் சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்று வரும் கேரம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த காசிமா, நாகஜோதி, மித்ரா, மரிய இருதயம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இவர்களில் 17 வயதே ஆன சென்னை புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வீராங்கனை காசிமா மூன்று பிரிவுகளில் பங்கேற்றார்.
மகளிர் தனிநபர், மகளிர் இரட்டையர் மற்றும் மகளிர் குழு பிரிவு என மூன்று பிரிவுகளில் தங்கம் வென்று காசிமா சாதனை படைத்து இருக்கிறார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் காசிமாவுக்கு வாழ்த்துக்களை கூறி உள்ளனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு இருக்கும் வாழ்த்துப் பதிவில், “அமெரிக்காவில் நடைபெற்ற ஆறாவது கேரம் போர்டு உலகக் கோப்பையில் சென்னையைச் சேர்ந்த நம் தமிழ் மகள் காசிமா மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளதற்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்! பெருமை கொள்கிறேன் மகளே… எளியோரின் வெற்றியில்தான் திராவிட மாடலின் வெற்றி அடங்கி இருக்கிறது!” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டு இருக்கும் வாழ்த்துப் பதிவில், “சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தங்கை காசிமா, அமெரிக்காவில் நடைபெற்ற 6-ஆவது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 பிரிவுகளில் தங்கம் வென்று உலக அளவில் சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் காசிமாவின் பயணம் – பயிற்சிக்காக ரூ.1.50 லட்சத்தை நாம் வழங்கி வாழ்த்தியிருந்த நிலையில், 3 தங்கப் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டுக்கு பெருமைத் தேடித்தந்துள்ளார். தங்கை காசிமாவின் வெற்றிப்பயணம் தொடரட்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் 21ம் தேதி இந்தியா திரும்ப உள்ள காசிமா-வுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.