ஸ்ரீநகர்: ஸ்விட்சா்லாந்துக்கு இணையாக ஜம்மு-காஷ்மீா் மேம்படுத்தப்படும் என ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற ரூ.32,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். சா்வதேச சுற்றுலாத் தலமான ‘ஸ்விட்சா்லாந்துக்கு இணையாக ஜம்மு-காஷ்மீரை மேம்படுத்த மத்திய பாஜக அரசு உறுதிபூண்டுள்ளது’ என்றும், ஜே&கே பல தசாப்தங்களாக வம்ச அரசியலின் சுமையை தாங்க வேண்டியிருந்தது என்றும் மாநில கட்சிகளை விமர்சித்தார்.
காஷ்மீரில் ரூ.32,000 கோடியில் திட்டங்களை தொடக்கி வைக்க சென்ற பிரதமர் மோடி, அத்துடன் தமிழகத்தில் ஐஐஐடி-டிஎம்மில் புதிய வளாகம் உள்பட பல்வேறு கட்டிடங்களையும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமா் மோடி, அங்கிருந்தபடி காணொலி வாயிலாக பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அா்ப்பணித்ததுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினாா்.
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற நிகழ்ச்சி கல்வி, ரயில்வே, விமானப் போக்குவரத்து, சாலைகள் உள்ளிட்ட துறைகளில் ரூ.32,000 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை பிரதமர் நரேந்திரமோடி மக்களுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 1,500 அரசு ஊழியருக்கான பணி நியமனக் கடிதங்களையும் பிரதமர் மோடி வழங்கினார். பின்னர் விக்சித் பாரத்”, விக்சித் ஜம்மு திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு திட்டப் பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
பிரதமர் மோடி தொடங்கி வைத்த ரயில்வே திட்டங்களில் பனிஹால்-காரி-சம்பர்-சங்கல்தன் (48 கி.மீ.) மற்றும் புதிதாக மின்மயமாக்கப்பட்ட பாரமுல்லா-நகர்-பனிஹால்-சங்கல்தன் (185.66 கி.மீ.) வழித்தடமும் அடங்கும்.
பள்ளத்தாக்கின் முதல் மின்சார ரயிலையும், சங்கல்தன் மற்றும் பாரமுல்லா நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவையையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு தரமான மற்றும் முழுமையான சுகாதார சேவைகளை கிடைக்கச் செய்வதன் ஒரு பகுதியாக எய்ம்ஸையும் பிரதமர் திறந்து வைத்தார். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் இந்த எய்ம்ஸ் நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. “பிரதமரின் ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனா என்ற மத்திய அரசின்திட்டத்தின் கீழ் இது கட்டமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த எய்ம்ஸ் மருத்துவமனை ரூ.1,660 கோடி செலவில் 227 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜம்மு நகரில் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாராமுல்லா இடையே ரயில் இணைப்பை வழங்கும் இந்தியாவின் மிக நீண்ட ரயில் சுரங்கப் பாதை நேற்று திறந்து வைக்கப்பட்டது. 12.77 கி.மீ நீளம் கொண்ட இந்த பாதை டி-50 என்று அறியப்படுகிறது. இது, காரி-சம்பருக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது .
மேலும், நாடு முழுவதும் ரூ.13,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அவர் அந்த நிகழ்ச்சியின் வாயிலாகவே அடிக்கல் நாட்டினார். குறிப்பாக தமிழகத்தில் ஐஐஐடி-டிஎம் (காஞ்சி புரம்), உத்தர பிரதேசத்தில் ஐஐஎஸ் (கான்பூர்), உத்தராகண்ட் (தேவபிரயாக்) மற்றும் திரிபுராவில் (அகர்தலா) மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழகம், சத்தீஸ்கரில் ஐஐடி (பிலாய்), ஐஐடி (ஜம்மு),ஆந்திர மாநிலத்தில் ஐஐடி (திருப்பதி), ஐஐஎம் (விசாகப்பட்டினம்), ஐஐஎம் (புத்த கயா) கல்வி நிறுவனங்களின் நிரந்தர வளாகங்களும் அடங்கும்.
இதுதவிர, கேந்திர வித்யாலயாவின் 20 புதிய கட்டிடங்கள், ஜவஹர் நவோதயா வித்யாலயாவின் 13புதிய கட்டிடங்கள் உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஜம்மு-காஷ்மீரின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்குப் பெரும் தடையாக இருந்த 370-ஆவது சட்டப் பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் இந்த பிராந்தியம் அனைத்துத் துறைகளிலும் சீரான வளா்ச்சியை கண்டு வருகிறது’ என்று குறிப்பிட்டாா். பின்னா் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது: ஒரு குடும்பத்தின் நலனுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் ஆட்சியாளா்களால் சாதாரண மக்களின் நலன் குறித்து சிந்திக்க முடியாது. குடும்ப ஆட்சியால் பாதிக்கப்பட்டிருந்த ஜம்மு-காஷ்மீா், அதிலிருந்து விடுவிக்கப்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இது, இந்தப் பிராந்தியத்தின் புதிய சகாப்தமாகும். ‘வளா்ச்சியடைந்த இந்தியா’ என்பது ‘வளா்ச்சியடைந்த ஜம்மு-காஷ்மீா்’ என்பதையும் உள்ளடக்கியதாகும்.
ஜம்மு-காஷ்மீரில் பன்முக வளா்ச்சியை உறுதி செய்வதில் மிகப் பெரிய தடையாக இருந்தது 370-ஆவது சட்டப் பிரிவு. அந்தத் தடையை நீக்கியது பாஜக அரசு. இப்போது, அனைத்துத் துறைகளிலும் ஜம்மு-காஷ்மீா் சீரான வளா்ச்சியை கண்டு வருகிறது. 370-ஆவது பிரிவு நீக்கத்துக்குப் பிறகுதான், ஜம்மு-காஷ்மீா் மக்களுக்கு அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சமூக நீதி உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஜம்மு-காஷ்மீா் வளா்ந்து வருவது ஒட்டுமொத்த உலகுக்கும் மகிழ்வைத் தந்துள்ளது.
இப்போது தொடங்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள், ஜம்மு-காஷ்மீரின் ஒட்டுமொத்த மேம்பாட்டுக்கு உந்துதலாக இருக்கும். 50 புதிய கல்லூரிகள் திறப்பு: பாஜகவின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் நாட்டில் சாதனை எண்ணிக்கையில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் மட்டும் 50 புதிய கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. முன்பெல்லாம் வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், ஆள்கடத்தல்கள், பிரிவினைவாதம் என கவலைக்குரிய செய்திகளே ஜம்மு-காஷ்மீரில் இருந்து வெளிவந்தன. இப்போது, சமநிலைமிக்க, முழுமையான வளா்ச்சியுடன் கூடிய புதிய காஷ்மீரை நாம் கண்டு வருகிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் மிகவும் வளா்ச்சியடைந்த ஜம்மு-காஷ்மீரை உருவாக்குவதன் மூலம் அனைவரின் கனவுகளையும் நிறைவேற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
ஸ்விட்சா்லாந்து போன்ற சா்வதேச சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதையே மக்கள் மறந்துவிடும் அளவுக்கு ஜம்மு-காஷ்மீரில் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என்றும் கூறினார்.
பொதுக்கூட்டத்தையொட்டி, மகளிா் சுய உதவிக் குழு உள்பட மத்திய அரசின் பல்வேறு திட்ட பயனாளிகளுடன் பிரதமா் மோடி கலந்துரையாடினாா். அப்போது, 3 கோடி பெண்களை லட்சாதிபதி களாக்குவதே தனது விருப்பம் என்று பிரதமா் குறிப்பிட்டாா்.
ஜம்மு-காஷ்மீரில் அரசுப் பணிகளுக்கு தோ்வான 1,500 இளைஞா்களுக்கு நியமன ஆணைகளையும் அவா் வழங்கினாா். மழையையும் பொருள்படுத்தாமல், பிரதமரின் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு, கடந்த 2019-ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டது. மேலும், மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீா் இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்டது. பாஜக அரசின் இந்த நடவடிக்கையை எதிா்க்கட்சிகள் தொடா்ந்து விமா்சித்து வரும் நிலையில், பிரதமா் மோடி அம்மாநில வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.