ஸ்ரீநகர்

விதி எண் 370 நீக்கத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்திய முன்னாள் முதல்வர் ஃபரூக்  அப்துல்லாவின் சகோதரி மற்றும் மகள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி அன்று விதி எண் 370 ஐ விலக்கி காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு அம்மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.. அன்று முதல் மாநிலத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.   முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அப்போது முடக்கப்பட்டிருந்த மொபைல் சேவை நேற்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.   அத்துடன் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளும் நீக்கப்பட்டுள்ளன.  அரசு அலுவலகங்கள் மற்றும்  போக்குவரத்து இயங்கி வருகிறது.  ஆயினும் எதிர்க்கட்சித் தலைவர்கள் விடுவிக்கப்படவில்லை.

இன்று ஸ்ரீநகரில் விதி எண் 370 விலக்கப்பட்டதை எதிர்த்து பிரதாப் பூங்கா அருகே மாபெரும் கண்டனப் போராட்டம் நடந்தது.  இந்தப் போராட்டம் காவல்துறை அனுமதி மறுப்பை மீறி நடந்தது.   சிறை பிடிக்கப்பட்டுள்ள ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி ஆகியோரை விடுதலை செய்யக் கோரி முழக்கங்கள் எழுப்ப்பப்ட்டன.

இந்த போரட்ட்த்தில் கலந்துக் கொண்ட முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் சகோதரி சுரையா அப்துல்லா, ஃப்ரூக் அப்துல்லா மகள் சஃபியா அப்துல்லா கான், காஷ்மீர் மாநில முன்னாள் தலைமை நீதிபதி பஷீர் அகமது கானின் மனைவி ஹாவா பஷீர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சுரையா அப்துல்லா செய்தியாளர்களிடம்,” நாங்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி  முதல் வீடுகளில் அடைக்கப்பட்டு அந்த நேரத்தில் விதி எண் 370 நீக்கப்பட்டுள்ளது.  இந்நிகழ்வு விருப்பமற்ற கட்டாயத் திருமணத்துக்குச் சமமானது.  இந்த நடவடிக்கைகள் எவ்வித பலனும் அளிக்காது” எனக் கூறி உள்ளார்.