நியூயார்க்:
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் இப்போது நடந்துகொண்டிருக்கும் கூட்டத்தில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்செரீப் பேசினார்.
அப்போது அவர், “ஜம்மு&காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஒடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஆனால், சில வெளிநாட்டு சக்திகள் அதை தடுத்து பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகின்றன” என்றார். ஆனால் தொடர்ந்து பேசிய அவர், ”ஜம்மு காஷ்மீர் வரலாற்றில் பர்ஹானி வானி என்றும் பேசப்படுபவர். அவர் காஷ்மீர் வரலாற்றில் நினைவுச்சின்னமாக இருப்பார்” என்று பர்ஹானியை புகழ்ந்து பேசினார்.
மேலும், ”பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராகவே உள்ளது. ஆனால் இந்தியா ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளை விதித்து, அமைதிப்பேச்சுவார்த்தைக்கு மறுத்து வருகிறது” என்றார்.
பிறகு, காஷ்மீர் பிரச்னையில் ஐநா தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால், ஐநா உறுப்பு நாடுகள் அந்தத் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆகவே அந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று ஐநா பொதுச்செயலாளர் பான் கீ மூன் அறிவித்தார்.
பாகிஸ்தானின் இந்தத் தோல்வி சர்வதேச சமூகத்தில் இருந்து பாகிஸ்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதை தெளிவுபடுத்துவதாக சர்தேச அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
பயங்கரவாத நடவடிக்கைகளில் இருந்து பாகிஸ்தான் விலகி வந்தால் மட்டுமே அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று இந்தியா ஏற்கெனவே திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.