டில்லி
காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாராளுமன்றத்தில் அனுமதிப்பதை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி மத்திய அரசு விதி எண் 370 ஐ விலக்கி காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. அத்துடன் அம்மாநிலம் தற்போது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் பிரிவினைக்கு முன்பு 6 மக்களவை உறுப்பினர்களும் 4 மாநிலங்களவை உறுப்பினர்களும் உள்ளனர்.
காஷ்மீரைச் சேர்ந்த ஹுரியத் தலைவர் நேற்று டில்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “காஷ்மீர் பகுதி மாநிலமாக இருந்தபோது 6 மக்களவை உறுப்பினர்கள் தேந்தெடுக்கபட்டனர். அத்துடன் 4 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தற்போது காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் இன்னும் சட்டத்துக்கு விரோதமாக நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தொடர்கின்றனர். அத்துடன் உறுப்பினர்களுக்கான ஊதியம் மற்றும் சலுகைகளும் இவர்கள் அனுபவித்து வருகின்றனர்.
காஷ்மீர் மாநிலம் என ஒன்று இல்லாத நிலையில் இது சட்ட விரோதமாகும். இவர்கள் சட்டப்படி தற்போது உறுப்பினர்கள் இல்லை. எனவே உறுப்பினர்கள் அல்லாத இவர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைவதைத் தடை செய்ய வேண்டும். அத்துடன் இவர்களுக்கு ஊதியம், சலுகைகள் வழங்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.