லக்னோ: காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக, உ.பி. மாநிலத் தலைநகர் லக்னோவில், இரண்டு உலர்பழ வியாபாரிகள் தாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ நகரில் உலர் பழங்கள் வியாபாரம் செய்துவந்த 2 காஷ்மீர் மாநிலத்தவர்களை, இரண்டு நபர்கள் பெரிய குச்சிகளால் அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில், அந்த வியாபாரிகள் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால்தான், அவர்கள் தாக்கப்பட்டார்கள் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் கூறப்படுவதாவது: சந்தையில் வியாபாரம் செய்துகொண்டிருந்தபோது, அங்கே கட்டைகளுடன் வந்த இரண்டு நபர்கள், இந்த இரண்டு காஷ்மீரிகளையும் தீவிரவாதிகள் என்று கூறிக்கொண்டு அடிக்கத் துவங்கினர்.
மேலும், லக்னோவை விட்டு காஷ்மீருக்கு திரும்பிச் செல்லவில்லை என்றால், மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் மிரட்டியுள்ளனர். அப்போது சுற்றியிருந்த பொதுமக்கள் திரண்டு, அந்த வியாபாரிகளை மீட்டு, காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதுகுறித்து ஒரு பாதிக்கப்பட்டவர் கூறுகையில், “கடந்த 20 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு சோதனையை நான் இப்போதுதான் சந்திக்கிறேன். அவர்கள் சொல்வதைப்போல் நான் மிக எளிதாக காஷ்மீருக்கு திரும்பிச் சென்றுவிட முடியாது” என்று வருத்தத்துடன் பேசினார்.
– மதுரை மாயாண்டி