காஷ்மீர்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ஜகுரா பகுதியில் பாதுகாப்பு படை முகாம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
நேற்று இரவு சுமார் 7.30 மணிக்கு இந்த தாக்குதல் நடைபெற்றதாக தகவல்கள் கூறுகிறது. இதனையடுத்து பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகள் இடையே மோதல் நடைபெற்றது.
ஏற்கனவே கடந்த மாதம் காஷ்மீரில் உள்ள இந்திய எல்லை பகுதியான உரியில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
அதையடுத்து இந்திய ராணுவ வீரர்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது அதிரடி தாக்குதல் நடத்தி முகாம்களை அழித்தனர். இதனால் இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றம் உருவாகி உள்ளது.
அதன்பின்னர் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து உள்ளது. அடிக்கடி இந்திய பகுதிக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற தாக்குதலில் 8 பாதுகாப்பு படைவீரர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் ஒருவர் பலியாகி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படுகாயமடைந்த 8 ராணுவ வீரர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே சுமார் 40 முதல் 50 ரவுண்டுகள் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது.
கடந்த 27 நாட்களில் 6 முறை பயங்கரவாதிகள் காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்ள்கள் மற்றும் சிஆர்பிப் முகாம் தாக்குதல் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.