ஜம்மு:
ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தளபதி புர்ஹான் வானி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரில் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை மூண்டிருக்கிறது.
ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற பிரிவினைவாத அமைப்பின் தளபதியாக செயல்பட்டுவந்த புர்ஹான் வானி மீது பல்வேவறு வழக்குள் உள்ளன. இவரைப் பற்றி தகவல் தருபவர்களுக்கு 10 லட்சம் பரிசு எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் அவர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரம் மூண்டது. இதில் காவல்துறையினர் மூவர் உட்பட 11 பேர் காயமடைந்தனர்.
பந்திப்பூரா, காசிகுண்ட், லார்னூ, அனந்தனாக் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் காவல் சோதனைச் சாவடிகளை குறிவைத்து போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
நிலோ புகாம் மாவட்டத்தில் பாஜக அலுவலகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடினர். கொல்லப்பட்ட புர்ஹான் வானியின் சொந்த ஊரான டிரால் பகுதியில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பல்வேறு பகுதிகளிலும் செல்போன் சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் பல பகுதிகளுக்கு கலவரம் பரவி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.