குளித்தலையில் தனியாக இருந்த பெண்ணிடம் இருந்து 3 பவுன் செயின் திருடிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கரூர் மாவட்டம், குளித்தலை காவேரி நகரை சேர்ந்தவர் கணேசன். மீன் வியாபாரி. இவரது மனைவி ரேவதி. கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதி கணேசன் வெளியூர் சென்றதால், வீட்டில் ரேவதி தனியாக இருந்தார். இதனை நோட்டமிட்டு அங்கு சென்ற குளித்தலை கலப்பு காலனியை சேர்ந்த ஷாஜகான். திடீரென ரேவதியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.
இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீஸ் நிலையத்தில் ரேவதி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாஜகானை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததையடுத்து நீதிபதி சசிகலா தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றவாளி ஷாஜகானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து போலீசார் ஷாஜகானை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.