கருந்தமலை மாயோன் காவியம்பாகம் 6

ராக்கப்பன்

கருப்பர் – கோட்டை காத்த கருப்பரான கதை

 

ஊர் அழைத்து வரப்பட்ட கருப்பருக்கு, ஊர் காக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. ஊரார் அனைவரும் தாங்கள் மிகவும் பாதுகாப்பானவர்கள் காவலில் இருப்பதாக என்னினர். கருப்பரும், தமக்கு கொடுக்கப்பட்ட சிறப்பான வரவேற்பில் மெய்சிலிர்த்து போனார். தாம், விஜயரகுநாதருக்கும் அவருடைய குடிகளுக்கும் எப்படி கைமாறு செய்வோம் என என்னியபடி அன்றைய இரவை கழித்தார்.

சூரியன் உதித்தது, இருந்தும்  உதிக்கின்ற சூரியன் புதிதாய் இருந்தது. செயற்கையான ஓசை ஒலிகள் உறக்கத்தில் இருப்பவரையும் மெல்ல உசிப்பியது. இரை தேடும் பறவைகள் போல மனிதர்கள் தம் இரைக்கான வழிதேடி போயினர்.

கருப்பரும் ஊரை சுற்றிவந்து தமது கூட்டத்தினருடன் காவல் பனி குறித்து ஒரு ஆய்வு கூட்டம் நடத்தினார். பட்டி காத்த கூட்டம் ஊர் கோட்டை காக்க வியூகம் அமைத்தது. அத்தனை பணிகளுக்கும் நடுவினுள்ளும் வீரத்தாள் சபதத்தை மீறி வந்தோமே என்று மனம் உள்ளுர கலங்கியது. இருந்தும், அந்த வானுயர வெட்டறுவாள் அழைத்து வந்ததாகவே உணர்ந்தார். தம் பிறவிப்பயன் அழைத்து வந்ததாக என்னினார்.

கருப்பர் தாம் வந்த பணி விரைவில் முடித்து காடு திரும்புவதை பற்றியே என்னினார். நிழல் அற்ற போதே மரத்தின் அருமை புரியும், அதை போன்று காடுகளை விட்டு பிரிந்தபின் காடுகள் மீதான அவசியத்தை மேலும் உணர்ந்தார். ஊர் காக்கும் காவல் அணியின் தற்காப்பு நிலையெடுப்புகளை தமது தம்பி மாருடனும் தனது கூட்டத்தாருடனும் கூடி வடிவாக அமைத்தார். கருப்பருடைய தற்காப்பு நிலையெடுப்புகள் மற்றும் வியூகங்களை கண்டு வியந்த விஜயரகுநாதர் வல்லம்பர் கூட்டத்தில் இருந்து சிறந்த 50  வில் வீரர்களையும் அந்த காவல் அணியில் இணைத்து அந்த காவல் அணியை மேலும் வலு சேர்த்தார்.

விஜயரகுநாதர், அறிவுடை நம்பி, ரகுநாதர் மற்றும் கருப்பர் சேர்ந்து தாங்கள் போர் தொடுக்க சரியான நாள் குறிக்க திட்டமிட்டனர். தங்களுடைய புது ஆயுதமான வளரி வீச்சுக்கு  மிகவும் அவசியமான  காற்று அடிக்க தொடங்கும் ஆடி மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆடி வருவதுற்கு இனமும் இரண்டு மாதங்கள் இருந்தாலும், கருப்பர் தந்த ஆலோசனையின் நன்மை அறிந்து அனைவரும் அதை ஏற்றனர்.

மாதம் குறித்த கருப்பரிடம் இருந்து,  நாளும் நேரமும் குறிக்கும்  பொறுப்பு அறிவுடை நம்பிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அறிவுடை நம்பி நிறைந்த அம்மாவாசை நாளை தேர்ந்தெடுத்தார். அன்றைய தினம் தொடங்கப்படும் போர் விஜயரகுநாதருக்கு நிறைந்த வெற்றியை தேடித்தரும் என்றார். அனைவரும், அந்தநாளையும் நேரத்தையும் என்னி காத்திருந்தனர்.

இரண்டு மாதங்கள் என்பது, விஜயரகுநாதருக்கு ஒரு முழு போருக்கு தயாராவதற்கு போதிய அவகாசமானதாக இருந்தது. தாக்குதல் படையணிக்கு ரகுநாதர் தலைமை ஏற்பதாக முடிவானது. தாக்குதல் படையணி தயார்படுத்தும் முன்னெடுப்புகளை அறிவுடை நம்பிகளின் ஆலோசனையின் பேரில் ரகுநாதரின் மேற்பார்வையில் நிகழும் என்று விஜயரகுநாதர் அறிவித்தார். ஊர்  காவல் காக்கும் காவல் படையணியை கருப்பர் தலைமை ஏற்பர் என்றும் அதற்குரிய உப வேலைகளை முத்தரையர் தலைவர் கண்ணப்பர் ஏற்பர் என்றும் முடிவானது.

கடவுளை தேடி வந்த முத்தரையர் கூட்டத்திற்கு உள் ஊர் காவல் பணி தரப்பட்டது. கோவில்களை பாதுகாக்கும் பணி யாரிடம் கையளிப்பது என்று எண்ணிய போது, அறிவுடை நம்பிகள், களவு போன இறைவனை தேடி வந்த முத்தரையர் கூட்டத்திற்கு  தான் கோவில்களை காக்கும் பொறுப்பு கொடுக்க படவேண்டும் என்றார். அந்த, அறிவுரையின் நியாயத்தை புரிந்த விஜயரகுநாதரும், சிங்க கொடியுடன் கோவில்களை காக்கும் பணியை முத்தரையர் கூட்ட  தலைவர் கண்ணப்பரிடம் கொடுத்தார்.

கோவில்களை காக்கும் பணி அன்று தொட்டு தமது சமூகத்திற்கே தொடரவேண்டும் என்று கண்ணப்பர் வேண்டினார். அன்று ஏற்ற கடமை சந்ததி தொட்டு தொடருகிறது.  கண்ணப்பரும், தனது குடிகளை ஊரில் உள்ள அனைத்து பெரிய கோவில்களின் அருகாமைக்கு மாற்றினார். இனியொரு கடவுள் களவு போவதை எந்நாளும் அனுமதியோம் என்று மனதில் உறுதி ஏற்றார்.

நாட்கள் நகராமல் மெல்ல நகர்ந்தது. இருந்தும் பணிச்சுமை அதிகம் இருந்தது. அனைவரும் தமக்கான பணிகளில் முழு சிரத்தையுடன் ஈடுபட்டனர். விஜயரகுநாதரின் திட்டங்களை வல்லவராயர்களும் தமது ஒற்றர்கள் மூலம் அறிந்தே இருந்தனர். அவர்களும், அப்போரை வெல்ல வியூகங்களை வகுத்தனர். அவர்கள் திட்டத்தில், நேரத்தை விட சூதிற்கு முதலிடம் அளித்தனர். எதிரியிடம் முன்னறிவிப்பு செய்யாமல், அவன் எதிர்பாராத தருணத்தில், எதிர்பாராத இடத்தில் வழிய தாக்குவதாக முடிவெடுக்க பட்டது.

விஜயரகுநாத தொண்டமானின் போர் அறிவிப்பை ஏற்பதாக ஓலை அனுப்பிய வேலையில், முன்னறிவிப்பின்றி ஒரு வலிந்த தாக்குதலுக்கு ஆயத்தமாயினர்.

போர்க்களத்தில் முதலில் பலியாவது உண்மையும், தர்மமும் தான். வல்லவர்யர்கள் களப்பலிக்கு தயாரானார்கள்.

விஜயரகுநாதரின் படையணி ரகுநாதரின் தலைமையில் போர்க்களம் நோக்கி புறப்பட்டனர். படையின் பின் தளத்தில் விஜயரகுநாதரும்  அறிவுடை நம்பிகளும் இருந்தனர். ஆடி அமாவாசைக்கு மூன்று தினங்களுக்கு முன்னதாக படையணி புறப்பட்டது. கருப்பர் வழியனுப்ப, வீரவேல் வெற்றிவேல் முழக்கங்களுடன் படையணி பயணப்பட்டது.

தாக்குதல் படையணி புறப்பட்ட ஒருநாள் கழிந்தது. கருப்பருக்கு ஏனோ உறக்கமே இல்லை. தாமே காவல் பணியில் இருந்தார்.  அந்த காரிருளிலும் ஓராயிரம் கண்கள் தம்மை அவதானிப்பதாக உணர்ந்தார்.அன்றைய இரவு கழியாமல் கழிந்தது.

அடுத்த இரவை அனைவரும் எதிர்கொண்டாலும் உள்ளூர அனைவரின் மனமும் சஞ்சலத்தில் இருந்தது. அது கலக்கம் அல்ல, ஆனால் ஒரு சஞ்சலம், இறுக்கம். அமைதியின் அவசியத்தை அந்த காரிருள் உணர்த்தியது.

நடு நிசி கடந்த போது, கருப்பர்  வித்தியாசமான சூழலை உணர்ந்தார். வேகமாக முன்னகரும் குதிரை காலடி ஓசைகள் கேட்டது. வருவது தமது வீரர்களானால் காவலுக்குரிய ஒலி எழுப்பியபடி தான் மெல்லமாக அருகாமையில் வருவார்கள். நிச்சயம் வருவது எதிரியும் அவனோடு ஆபத்தும் என்பதை உணர்ந்தவராக அபாய மணிஓசையை ஒலிக்கச்செய்தார். காவலில் இருந்த அனைவரும் தயார் நிலைக்கு திரும்பினர்.

வல்லம்பரின் அம்புகள் ஓசை வந்த திசையை நோக்கி காற்றை கிழித்தபடி எதிரியை தேடி சென்று வரவேற்றது. வல்லவராயர்களின் சூது சற்றும் இதை எதிர் பார்க்கவில்லை. தொண்டமானின் படைகள் போர்க்களத்தில் தயார் நிலையில் இருப்பதாய் அறிந்துதானே இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டது. தொண்டமான் தமக்கு யாருமறியா ஆச்சர்யத்தை எங்கே மறைத்து வைத்திருந்தான். எதிர் தாக்குதலின் வீரியம் கண்டு சற்றே நிலைதடுமாறினர் வல்லவராயர்கள். அது போதுமான அவகாசத்தை கருப்பருக்கும் அவரது கூட்டத்திற்கும் அளித்தது.

கோவில் காவலுக்கு இருந்த முத்தரையர்களும் சூழ்நிலையின் விபரீதம் அறிந்து கோட்டையின் காப்பரண்களுக்கு விரைந்தனர். தம்மை காப்பதிலும் தம் மக்களையும், பெண்டிரையும் காக்க அனைவரின் வீரமும் சாவை காண துடித்தது. மரணத்தை முத்தமிட துடிப்பவனையே வெற்றி அரவணைக்க துடிக்கும் என்பதை சரித்திரம் எப்போதும் பதிந்துகொள்ளும். சாவை காண துடிப்பவன் அதை தம் எதிரிக்கு முதலில் பரிசளிப்பான்.

கருப்பரோ, தமது கூட்டத்தில் இருந்த இளவல் மற்றும் மைதுனரான ஆதி கோனை அழைத்து தமது கோட்டை முற்றுகைக்கு உள்ளாகி இருப்பதாய் விஜயரகுநாதருக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றார்.

விஜயரகுநாதரின் முறியடிப்பு படையணி வரும் வரை தாம் எதிரியின் தாக்குதலை தாக்கு பிடித்து நிலைத்து இருப்பதாக செய்தி அனுப்பினார்.

ஆனால் அந்த காரிருளில் விஜயரகுநாதரின் இருப்பிடம் எப்படி அறிவது ? சற்றும் யோசிக்காமல் கருப்பர் தனது நாயான,  காவலரண் தோழன் பைரவன், ஆதியை  விஜயரகுநாதரிடம் அழைத்து செல்லும் என்றார்.

வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்பதை போல காத்திருந்த பைரவரும் உடன் விஜயரகுநாதர் இருந்த திசைநோக்கி ஓடத்தொடங்கியது. அதன் மதிநுட்பம், ஓடிய திசையில் எதிரியின் கண்ணில் படாமலும் அழைத்துச்சென்றது. ஆதி கோனும் பைரவருக்கு சற்றும் சளைக்காமல் ஓட தொடங்கினார்.

பைரவரும் ஆதியும் முந்தியும் பிந்தியுமாக ஓடினார்கள். ஓட்டம் உயிர் காக்கும் என்றால், அதுவும் தமது மாமனை காக்கவேண்டி என்றால் நடுநிசியிலும் காற்றாய் பறந்தனர். இன்னமும் எவ்வளவு தூரம் ஓட வேண்டியது என்றும் அறியவில்லை, அவர்கள் இவ்வளவு வேகமாக ஓடமுடியும் என்பதையும் அறியவில்லை. ஆனால், கடமை அவர்களை ஓடச்செய்தது.

நடு நிசி மெல்ல கடக்கையில், தாக்கும் படையின் வல்லமையை கருப்பர் கணித்தார். விடியல் பொழுதில், இருள் அளித்த காப்பரண் மெல்ல விலகுகையில் தமது பலவீனம் எதிரிக்கு புலப்படும். எண்ணிக்கையில் குறைவாய் இருப்பதாய் எதிரி உணர்ந்தால், தாக்குதல் பலம் பெரும்.

கருப்பர் தமது கூட்டத்தினர் யாரும் நெருப்பை பயன்படுத்த கூடாது என்றார். இருள் அளித்த கவசத்தில், வளரி வீச்சுகள் எதிரியின் தலை கொய்திவந்தது. வல்லவராயர்கள் சற்றும் எதிர்பாராத வளரி வீச்சுகளால் நிலைகுலைந்தனர். மேலும், எங்கிருந்து வருகின்றது என்று  தெரியாமல் வரும் அம்புகளால் சிதறுண்டனர். வல்லவராயர்கள், நிகழும் விபரீதத்தை உணர்ந்து தாக்குதலை சற்று மட்டுப்படுத்தி விடியலுக்கு காத்திருக்க தொடங்கினர்.

போர்க்களத்தின் தாக்கத்தை உடனே உணர்ந்த கருப்பரும், விடியல் அழைத்துவரும் விபரீதத்தை உணர்ந்தார். காடு அளித்த பால பாடம், தாக்குதலே சிறந்த தற்காப்பு என்பதை உணர்ந்த கருப்பர், ஒரு மின்னல் வேக எதிர்தாக்குதலுக்கு திட்டமிட்டார். திட்டத்தின் விபரீதத்தை உணர்ந்த பலரும் அதை எதிர்த்தார்கள். ஆனால், கருப்பாரோ கோட்டையின் தஞ்சமுள்ள குடி காக்கவும், பசு, பொருள், தெய்வம் காக்கவும் அத்தகைய தாக்குதல் உடனடியாக துவங்கவேண்டும் என்றார்.

கருப்பருடன் அவருடைய சகோதரர்கள் ஏழு பெரும் தாக்குதலுக்கு தயாரானார்கள். கருப்பாரோ, அவர்களில் மிகவும் இளையோரான ராக்கப்பனை மட்டும் கோட்டையின் உள்நிறுத்தி மற்ற ஆறு சகோதரர்களுடன் களம் காண தயார் ஆனார். தங்கள் மீதான தாக்குதல் வீரியமாக இருக்கும் திசையை கணக்கிட்டு அங்குதான் தாக்குதல் அணியின் தலைமை இருக்கும் என்று அவதானித்தார்.

வல்லம்பர்கள், வீரியமான ஒரு வில் அம்பு தாக்குதலை எதிரியின் தலைமை திசைநோக்கி நடத்த, காற்றையும் விட வேகமாக, மின்னலையும் மிஞ்சும் விதமாக ஒரு பயங்கர தாக்குதலை கருப்பரோடு சேர்த்து ஏழு சகதோரர்கள் நிகழ்த்தியவாறு அந்த திசையை நோக்கி வேகமாக முன்னேறினார்கள். அப்படி ஒரு தாக்குதலை வல்லவராயர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

மரணத்தை இருளில் தேடி மாலையிட யார் துடிப்பார்கள் ? கருப்பரும் அவர் சகோதரர்களும் நினைத்தார்கள் !

துணிந்தவனுக்கு ஏது தடை கற்கள். அவர்களின் வளரி வீச்சு, அதுவும் இரு கை வீச்சு, எதிரியின் தலைகளை காணாமல் செய்துகொண்டே அவர்களை முன்நகர்த்தியது. கண்ணிமைக்கும் நேரத்தில் பெரிய வல்லவராயன் முன் தோன்றினார் கருப்பர். அவருடைய வெட்டறுவாள் நீளத்திற்கு பெரிய வல்லவராயன் தலைக்கொடுத்தார்.

பெரிய வல்லவராயன் மடிந்தார் என்ற செய்தி அந்த விடியும் விடியாத பொழுதிலும் காட்டுத்தீயாய் பரவியது.

கருப்பர், தான் வந்த வழி பார்த்தார் அவர் சகோதரர் ஆறு பேறும் வீர மரணம் அடைந்திருந்தார்கள். ஆனால், எதிரி சிதறி ஓடியிருந்தனர். தம் கோட்டை முற்றுகை உடைக்கப்பட்டதை அவரும் கோட்டையின் உள்ளிருந்தவர்களும் உணர்ந்தனர். வெற்றி நெஞ்சை நிறைக்கயில் நினைவுகள் வீராத்தாளை தேடியது. கண்ணிமைகள் மூட துடிக்கின்றது. மரணம் வாசல் வந்து அழைத்துப்போக நிற்கிறது. வான்மழை , கருப்பரை வழியனுப்ப அழுது புரண்டது. இமயம் மெல்ல சரிந்தது.

கருப்பர் , மெல்ல கோட்டை காத்த கருப்பாரானார்.

கோட்டை கருப்பர் காவியம் தொடரும் !