கருந்தமலை மாயோன் காவியம்பாகம் 12

ராக்கப்பன்

வெற்றி வாகை சூடிய பெரியகருப்பன்

 

பொழுது விடிந்தததும் சுண்ணாம்புயிருப்பு கூட்டம் வீடு தேடி வந்து வம்பு வளர்க்கும் என்பதை தனது அனுபவத்தால் நன்கு அறிந்திருந்த ராக்கப்பன், துரிதமாக செயல்பட முடிவெடுத்தார். தனது மாப்பிள்ளை வைரவனுக்கும் அவரது கூட்டத்தாருக்கும் உடனடியாக வரச்சொல்லி செய்தி அனுப்பினார். அதேவேளையில், திருப்பத்தூர் ஊராரையும் அழைத்து வரச்செய்தி அனுப்பினார். இதே செய்தியை அரசல் புரசலாக அறிந்த மணல்மேல்குடியினரும் ராக்கப்பனின் மேல் கொண்ட அன்பால் இரோவோடு இரவாக திரண்டனர்.

கருப்பாயி, ஆதம்மையை வைக்கப்போர் தோட்டத்தில் மறைத்து வைத்திருந்தால். அன்றைய இரவு மிக மெதுவாக கழிந்தது.

 

சூரியன் உதிக்கும் அதிகாலை நேரமே சுண்ணாம்புயிருப்பு கூட்டத்தினர் பெரும்திரளாக வேல்கம்பு, வெட்டரிவாளோடு வந்திருந்தனர்.வந்தர்வர்களுக்கு இணையான கூட்டம் அவர்களை வரவேற்க  காத்திருந்தது. திருப்பத்தூர் அம்பலத்திடம் நடந்த நிகழ்வுகள் விவரிக்கப்பட்டன.

பேசிமுடித்த பெண்ணை அழைத்துச்செல்வது மன்னிக்க முடியாத பழக்கமாக / வழக்கமாக இருந்த காலகட்டத்தில் கிருஷ்ணன் செய்ததை ஒருகொலை குற்றமாகவே பார்க்கப்பட்டது. கிருஷ்ணன் தலையையும், ஆதம்மையையும் கேட்டு நின்றனர்.பஞ்சாயம் முடிவதாக  இல்லை. ராக்கப்பனும் ஊர் அம்பலமாக இருந்த இடத்தில், இந்த பஞ்சாயத்து கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவராக, குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருந்தார். பஞ்சாயத்து அம்பலத்தார் ஆதம்மையை அழைத்துவர சொன்னார்கள்.

ஊர் கூட்டத்தின் முன் வந்து நின்ற ஆதம்மை தான் கிருஷ்ணனுடன் தான் வாழ விரும்புவதாகவும் அப்படி வாழ்க்கை அமையமுடியவில்லை என்றால் தான் நாண்டுக்கிட்டு சாவதாக சொன்னால். தீர்வு எட்டமுடியாமல் நாட்டுக்கூட்டம் சென்றுகொண்டு இருந்தது. இதே மேடையிலே, பல தீர்ப்புகளை வழங்கிய ராக்கப்பன், இன்று கிருஷ்ணன் வம்பால் குற்றவாளியாக நின்றிருந்தார்.நாட்டு அமபலத்தார், இதற்கான தீர்வை ராக்கப்பனே சொல்லலாம் என்றனர்.

ராக்கப்பன், ஆழ்ந்த சிந்தனைக்கு பின் பேசத்தொடங்கினார். கிருஷ்ணன் செய்த செயல் குற்றமே, அந்த குற்றத்தின் தண்டனையாக ராக்கப்பன் திருப்பத்தூர் அம்பல பட்டத்தை இழப்பதாகவும், சுண்ணாம்புயிருப்பு மாப்பிள்ளைக்கு சில்லாம்பட்டி வைரவனின் தங்கை சின்னத்தாளை மணம்முடித்து தருவதாக கூறி நாட்டு அம்பலத்தார் முன் கும்பிட்டார்.

நாட்டார் மற்றும் கூட்டத்தார் அனைவருக்கும் இந்த தீர்வு ஏற்புடையதாக இருந்தது. சுண்ணாம்பிருப்பு கூட்டத்தாரும் ராக்கப்பனின் பணிவு மற்றும் நேர்மையான நியாயமான தீர்ப்பை கண்டு அவரை ஆரத்தழுவி கொண்டனர். கூட்டம் களையும் முன்னர், முன்னிரவு பனைமரத்திற்கு தலைப்பாகை கட்டி கிழவி அழகி தம்மை ஏமாற்றிவிட்டால் என்று சுண்ணாம்புயிருப்பு கூட்டத்தினரே கூறி பகடி செய்தனர்.

கிருஷ்ணன் ஆதமை திருப்பூட்டு மற்றும் சுண்ணாம்புயிருப்பு மாப்பிள்ளை மெய்யப்பனுக்கும் வைரவனின் உடன்பிறந்தால் செவத்தால் திருப்பூட்டும் ஒருங்கே நடந்தேறியது. ராக்கப்பன், இருதிருப்பூட்டயும் வாழ்த்திய பின் தன் மானம் காத்த வைரவனின் தோல் பற்றி நடந்து வந்தார். கருப்பர் கூட்டத்தின் தோள்நின்ற குடி சில்லாம்பட்டி வைரவன் குடி. வைரவன் கரம் பற்றி தம் வம்சத்தின் கொண்டான் கொடுத்தான் தொடர்பு காலத்திற்கும் நிலைக்கும் என்று வாக்கு தந்து வீடு வந்து சேர்ந்தார்.

ராக்கப்பன் இத்தனை சோர்வாகி யாரும் பார்த்ததில்லை. தோட்டத்தின் கயிற்று கட்டிலில் படுக்க நினைத்து சாய்ந்த ராக்கப்பன், மல்லாக்க விழுந்தார்.விழுந்த பொழுதே உயிர் பிரிந்தது. தான் பெரிதும் விரும்பிய வைரவன் கையிலே உயிர் பிரிந்தது.

அழகி மற்றும் பெரியகருப்பன் நினைவுகள் கருந்தமலை கருப்பர் அருள்வாக்கு நோக்கி சென்றது. கிருஷ்ணனுக்கு வம்போடு மாலையும், ராக்கப்பனுக்கு விடை பெற்று செல் என்பதன் அர்த்தமும் அப்போதுதான் விளங்கியது.

வேலாயுதம் இத்தனை சரியாக அருள்வாக்கு தந்தானே என்று அழகி அழுது புலம்பினாள். சிகப்பியின் ஒப்பாரியில் ஊரே கண்ணீரில் கரைந்தது. கருந்தமலை பயணம் தொட்டு கருப்பர் குடி காத்த ராக்கப்பா, மணம் முடிக்காத பரமாத்மா, மானம் போகில் உயிர் நீத்த கவரி மானே, சுயநலம் அற்ற குணாள, உறவு தாண்டி, மதம் இனம் கடந்து ராவுத்தரை  வளர்த்த சீமானே, சென்று வாரும் ஐயா.

கிருஷ்ணனுக்கோ தன்னால் தான் ராக்கப்பன் மாண்டாரோ என்று பெரிதும் கலங்கினான். அழுது புரண்டாலும் மாண்டார் திரும்புவாரோ ?

திருப்பத்தூரே கலங்கியது. ராக்கப்பனோடு திருப்பத்தூர் அம்பலமும் போனது.

கருப்பர் குடி, அடையாளம் தொலைத்து நின்றது.

ஊர் குடி பெரிய கிழவன் ராக்கப்பனுக்கு இறுதி பயணம் தயாரானது. ஊர் சம்பிரதாயம், யாரும் அன்று பணிக்கு செல்லவில்லை. துக்க வீடும் கலைக்கட்டியிருந்தது. உற்றார் உறவினர் நீர்மாலை எடுத்து வந்து ராக்கப்பனை நீராட்டினர். பேரன் பேத்தி நெய்ப்பந்தம் பிடிக்க வீட்டில் இருந்து  காட்டுக்கு இறுதிப்பயணம் புறப்பட்டார் ராக்கப்பன்.

மயானத்தில், இறுதிகாரியங்கள் தொடங்கியது. மயானம் எட்டியுடன் ராக்கப்பன் உடலை ஊரார் பொறுப்பேற்றனர். செல்வசீமானும், ஆண்டியும், அரசனும், ஏழையும் பாலையும் சரிசமம் அங்கே. ராக்கப்பனின் உறவினர் சிலர், ராக்கப்பனுக்கு விமரிசையான இறுதி சடங்குகள் செய்யவேண்டும் என்று வம்பு வளர்த்தனர்.

ஊரார் தலையிட்டு, துயரத்தில் பெரும் துயரம், துக்க வீட்டில் அடக்கம் செய்ய முடியாமல் நிற்பது. அந்த துயரம், எம் சமூகத்தில் எங்கும் நடக்க கூடாது என்பதற்காக திருப்பூட்டில் தலையிடாத ஊரார் நல்லடக்கம் செய்கையில் நிச்சயம் தலை இடுவர். இங்கு நடை பெரும் சம்பிரதாயங்களும், செலவுகளும் அவரவர் சக்திக்கு ஏற்பநடப்பதல்ல, மாறாக அனைவரும் எக்காலத்திலும் செய்யக்கூடியதாக இருக்கவேண்டும்.

ஆகையால், உங்கள் பகட்டை, பரிபாராளனத்தை, சிறு சுடலையோடு நிறுத்திக்கொள்ளுங்கள். சுடலை வந்தடைந்த அனைத்து சடலங்களும் ஒரே மரியாதை, சம்பிரதாயங்கள், கூலிகள் தான். இதை, வகுத்துக்கொடுத்ததில் அய்யா ராக்கப்பனின் பங்கும் மிக பெரியது. அதற்கு மரியாதை கொடுத்து ஊராருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ராக்கப்பனின் இறுதி காரியங்கள் சிறப்புடன் நடந்தேற ஊர் அம்பலம் கோரிக்கை வைத்தார். அவர் வைத்த தர்க்கத்தின் பொருள் புரிந்து ராக்கப்பன் அய்யா சமூகத்திற்கு ஆற்றிய பெரும்பங்கை நினைத்து அனைவரும் துக்கத்திலும் வியந்தனர்.

“துயரத்தில் பெரும் துயரம், துக்க வீட்டில் நிகழும் கடைசி காரியங்கள் செய்ய பொருள் இல்லாமல் நிற்பதுதான், அதை சாமானியனுக்கும் சாத்தியப்படும் வகையில், சுடலை சேர்ந்தால், ஊரார் பொதுவில் சம்பிரதாயங்களும், செலவுகளும் நிகழும் என்று அய்யா வகுத்த நீதி ” அன்று வந்த அனைவர் மனதிலும் நிழலாடியது.

(இன்றளவும், திருப்பத்தூர் சுற்றுவட்டாரங்களில் சுடலை சம்பிரதாயங்களும், செலவுகளும் ஊரார் கட்டுப்பாட்டில் தான் நிகழ்கின்றன.)

அன்றைய நிகழ்வுகள் துயரத்தோடு முடிந்து, வீடு திரும்பி அனைவரும் உணவருந்தி கலைந்தனர். மறுநாள், சுடலை சென்று பாலாற்றி வீடு திரும்பினார்.

முப்பதாம் நாள் காரியம் நடந்தது. வைரவன் கோவில் சென்று வழிபட்டு, பெண்கொடுத்தோர் / தாய்மாமன் வழிவந்தோர் ஆகிய ஆதியான் குடும்பத்தாரும் வைரவன் குடும்பத்தாரும் பெரியகருப்பனுக்கு, கிருஷ்ணன், மற்றும் வேலாயுதத்திற்கும் தலைப்பாகை கட்டி அடுத்த குடும்ப தலைவராக அங்கீகரித்து , தாமிருக்கிறோம் மாமன் வீட்டார் என்று நின்று வழிநடத்தி வந்தனர். மாமன் வீட்டார் மற்றும் பெண் கொடுத்தார் குடும்பத்தாரின் அனுசரணை மற்றும் ஒரு குடும்பத்தை துயரில் இருந்து மீட்டு நிலைநிறுத்த தேவையான அவசியத்தை அன்றைய  நிகழ்வு  அருமையாக விளக்கியது. வீடு திரும்பிய பெரியகருப்பன் குடும்பத்தாருக்கு, உறவின் முறையினர் கறி சமைத்து விருந்து கொடுத்து, துக்கத்தில் இருந்து குடும்பத்தை மீட்டும் நிகழ்வு நடந்தேறியது.

உறவுகளின் முக்கியத்துவம், கூடிவாழ்வதின் அவசியம் அறியாமல் யாரிருந்தார் அன்று. பெரியகருப்பன் குடும்பம் இயல்பு நிலைக்கு திரும்பியது.

காலங்கள் மெல்ல கடக்கையில், திருப்பத்தூர் நாட்டிற்கு உட்பட்ட கிராமங்களில் ஒன்றான தெம்மாபட்டில், மாட்டு வண்டி பந்தயம் நடப்பதாக  அறிவுப்பு வந்தது. வண்டி மாடுகளில் பெயர்போன பெரியகருப்பனுக்கும் வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பு வந்தது.

வந்த அழைப்பு ஏற்று செல்வதா வேண்டாமா என்று எண்ணிய வேளையில், வேலாயுதத்திற்கு அருள் வந்தது. இது கருப்பன் கட்டளை, காளையொடு சென்று மாலையோடு திரும்பு என்று உத்தரவு வந்தது.

கருப்பரின் உத்தரவின் பேரில், வண்டியை கிருஷ்ணன் தயார் செய்ய, பெரியகருப்பனும் கிருஷ்ணனும் ஆக வண்டியேறி சென்றனர். ஊர்கூடி ஆர்ப்பரிக்க, உற்றார் உறவினர் படை சூழ அனைவரும் திருப்பத்தூரில் குழுமியிருந்தனர். வண்டி மாட்டு பந்தயம் ஆரம்பித்தது. கருப்பரின் காட்டு மாட்டு ரகமான காரை களம் கண்டது. போட்டியின் ஆரம்பம் முதலே, பெரியகருப்பன் முந்தி நின்றார். கிருஷ்ணன் லாவகமாக வண்டியின் பயணத்தில் துணை நின்றார்.

திருப்பத்தூர் மந்தையில் அனைவரையும் பின்தள்ளி பெரியகருப்பன் வாகை சூடினார். வெற்றி வாகை சூடினார்.

இனி பெரியகருப்பனின் காலம், ஆட்டம் ஆரம்பம்.