ஜூனியர் விகடன் இதழில் வைகோ:
“1973-ம் ஆண்டு என் தந்தையார் புற்றுநோயால் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் இறந்தார். ஓராண்டு கழித்து எனக்கும் உடலில் சிறிது பாதிப்பு ஏற்பட்டது. எனக்கும் புற்றுநோய் இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகப்பட்டனர். அண்ணாவுக்கு சிகிச்சை அளித்த ரேடியாலஜி மருத்துவர் ஜான்சன் எனக்கு சோதனை செய்தார். பிறகு’ என்னை மருத்துவமனையில் அனுமதிக்கச் சொல்லிவிட்டார்.
அந்த நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்துக்குக் கருணாநிதி சுற்றுப்பயணம் சென்றார். மருத்துவர்கள் தடுத்தும், நான் உறுதியாகக் கருணாநிதியை வரவேற்கச் செல்ல வேண்டும் என்று மருத்துவமனையிலிருந்து வெளியேறினேன். சங்கரன்கோவிலில் கருணாநிதி வரும் ரயிலுக்காக சால்வையுடன் காத்திருந்தேன். ரயில் நின்றபோது அனைவரிடமும் சால்வைகளை வாங்கிய தலைவர் என்னையும் ரயிலில் ஏறச் சொன்னார்.
தென்காசியில் இறங்கினோம். கருணாநிதி தங்கியிருந்த அறையின் வாசலில் காத்திருந்தேன், அப்போது கருணாநிதியின் குடும்ப மருத்துவர் கோபால் அறையிலிருந்து வெளியே வந்தார். என்னிடம், ’’நீங்கள் தலைவருக்கு ரொம்ப வேண்டியவரா?’’ என்று கேட்டார். நான், ‘’எதற்காக அப்படிக் கேட்கிறீர்கள்?’’ என்றேன். ‘’தலைவருக்கு விருதுநகரில் இரத்த அழுத்தப் பரிசோதனை செய்தபோது நார்மலாக இருந்தது இப்போது ரத்த அழுத்தம் அபாயகரமான அளவில் இருக்கிறது. இடையில் என்ன நடந்தது என்று தலைவரிடம் கேட்டேன்.’ தம்பி கோபால்சாமி வாட்டசாட்டமா இருப்பான். இப்போ ரொம்ப மெலிந்து போயிருக்கான். மருத்துவமனையிலிருந்து வந்திருக்கான். அதை நினைத்து வருத்தப்பட்டுக்கிட்டே வந்தேன்’ என்று சொன்னார். அதனால்தான், அவருக்கு ரத்த அழுத்தம் உயர்ந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினேன்’’ என்றார். அப்போதே எனக்குக் கண்ணீர் வந்துவிட்டது.”