சென்னை: “அறியாமைக்கும், ஏழ்மைக்கும் எதிராக குரல் கொடுத்தவர் கலைஞர்”. இன்று முக்கியமான நாள் என சட்டப்பேரவையில் மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி உருவப்படம் திறப்பு விழாவில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டினார்.
தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியை தொடங்கிய குடியரசுத்தலைவர். அதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில், மறைந்த படத்தலைவர்களின் வரிசையில், மறைந்த முன்னாள் முதல்வர் மு.க.கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:
“தமிழில் சில வார்த்தைகளுடன் எனது உரையைத் தொடங்க விரும்புகிறேன்.
இன்றைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் கலைஞரின் திருவுருவப்படத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். உண்மையில் இது ஒரு முக்கியத்துவம் மிக்க நாள்! முன்னர், மெட்ராஸ் சட்டமன்ற கவுன்சில் என்று பெயரிடப்பட்டிருந்த அவையின் நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆகஸ்ட் மாதம் என்பது நமது தேசிய நாட்காட்டியில் சிறந்ததொரு மாதமாகும். ஏனெனில், இது நமது சுதந்திர தினத்தின் ஆண்டு நிறைவையும் குறிக்கிறது.
விடுதலைக்குப் பிறகான ஆண்டுகளில், தேசம் பல துறைகளில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. மக்களும் தலைவர்களும் இணைந்து மேற்கொண்ட பணிகளினால் இது சாத்தியமானது.
அறியாமைக்கும், ஏழ்மைக்கும் எதிராக குரல் கொடுத்தவர் கலைஞர். சட்டப்பேரவையில் நீண்ட காலம் தனது பங்களிப்பை அளித்தவர். மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுக்கொடுத்தவர். திரைப்படம் உட்பட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர் கலைஞர்.
மெட்ராஸ் சட்டமன்ற கவுன்சிலின் வரலாறு, 1861 ஆம் ஆண்டு காலத்தையது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆலோசனை அமைப்பாக அக்காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு தான், 1921ஆம் ஆண்டில், சட்டத்தை இயற்றும் சட்டப்பேரவையாக உருவாக்கப்பட்டது. காலனித்துவ ஆட்சியின் கீழ், அத்தகைய அமைப்பு செயல்படுவதற்கு, பல வரையறைகளும், சவால்களும் நிச்சயம் இருந்தன.
சாதி, சமூகம் மற்றும் பிற அம்சங்களின் அடிப்படையில் ஏராளமான தனித்தனி தொகுதிகள் இருந்தன. ஓரளவேயாக இருந்த போதிலும், அது ஒரு பொறுப்பான அரசாங்கத்தை நோக்கிய நகர்வாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்த ஜனநாயகம், அதன் நவீன வடிவத்தில், மீண்டும் திரும்பியது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, ஒடிசா, லட்சத்தீவு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மெட்ராஸ் பிரசிடென்சியின் மக்களால் இந்தப் புதிய தொடக்கம் வரவேற்கப்பட்டது. விடுதலைப் போராட்ட இயக்கத்தால் வடிவமைக்கப்பட்ட இந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்களின் கனவுகளும், விருப்பங்களும் புதிய சட்டமன்றம் மூலம் வெளிப்பட முடிந்தது. மக்கள் தங்கள் கனவுகளை நனவாக்கும் ஒரு தளமாக, ஆரம்ப கட்டத்தில் மக்கள் வாக்குகளை வென்ற நீதிக்கட்சி இருந்தது.
சட்டமன்ற கவுன்சில், பின்வரவிருக்கும் காலத்திற்கான பல சட்டங்களை இயற்றியது. அதன் ஆரம்ப காலகட்டங்களில் அவை பல மாற்றங்களைச் சந்தித்தன. ஜனநாயக உணர்வு மாநில சட்டமன்றத்தின் வழிகாட்டும் ஒளிவிளக்காக உள்ளது. சமூகத்தின் நலிவுற்ற பிரிவினருக்கு அதிகாரம் அளிப்பதற்கும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும் நாடு முழுவதும் பிரதிபலித்த பல முற்போக்குச் சட்டங்களின் நீரூற்றாக இந்தச் சட்டங்கள் இருந்தன என்று சொல்வது தவறல்ல. மெட்ராஸ் சட்டமன்றம், ஒரு முழுமையான பிரதிநிதித்துவ ஜனநாயக வடிவ ஆட்சியாளுமைக்கான விதைகளை விதைத்தது. நாட்டு விடுதலைக்குப் பிறகு இதற்கான பலன்கள் கிடைத்தன.
ஆளுகையில் கவனம் செலுத்தி ஏழைகளை மேம்படுத்துவதற்கும், சமூகத் தீமைகளை ஒழிப்பதற்கும், ஜனநாயகத்தின் வேர்களை ஊன்றி வளரச் செய்த பெருமை இந்த சட்டமன்றத்திற்கு உண்டு. வறுமைக் கோட்டில் வாழ்ந்த மக்களின் நலனை இலக்காகக் கொண்டு, இப்பகுதியில், அரசியலும் நிர்வாகமும் நேர்மறையான, பகுத்தறிவு வாய்ந்த உள்ளடக்கம் கொண்டதாக உருவாயின. தேவதாசி முறையை ஒழித்தல், விதவை மறுமணம், பள்ளிகளில் மதிய உணவு, நிலமற்றவர்களுக்கு விவசாய நிலம் விநியோகம் ஆகியவை சமூகத்தை மாற்றியமைத்த சில புரட்சிகர எண்ணங்களாகும். இங்கு யார் ஆட்சி செய்தாலும் மாநிலத்தின் நலன் என்ற கருத்தாக்கமே இந்த சட்டமன்றத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் முற்போக்குச் சிந்தனையை எடுத்துக்காட்டுகின்ற வகையில், மிகச்சிறந்த தமிழ்க்கவிஞர் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் ஒரு சில வரிகளை இங்கே நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன்:
மந்திரம் கற்போம் வினைத்தந்திரம் கற்போம்
வானை யளப்போம், கடல் மீனை யளப்போம்
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்
சந்தித்தெரு பெருக்கும் சாத்திரம் கற்போம்.”
இவ்வாறு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார்.