திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் இருக்கிறார் என்றும் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நிலை குறித்து இன்று மதியம் வதந்தி பரவியது. சமூகவலைதளங்களில் பலர் கருணாநிதி உடல் நிலை குறித்து பலர் பதட்டத்துடன் பதிவிட ஆரம்பித்தனர்.
இதற்கிடையே, தமிழகம் முழுதும் உள்ள சிறப்புக்காவல் படையை உஷார் நிலையில் இருக்கும்படி, தமிழக டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியதாக தகவல் பரவியது. இதுவும் கருணாநிதி உடல் நிலை குறித்த வதந்தியின் வேகத்தை அதிகரித்தது.
ஆனால் செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி ராஜேந்திரன், “வழக்கமான சுற்றறிக்கைதான் சிறப்பு காவல் படையினருக்கு அனுப்பப்பட்டது” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், கருணாநிதியின் மகளும், எம்.பியுமான கனிமொழி, கருணாநிதி நலமுடன் இருக்கிறார் என்றும் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார்.