சிறப்புக்கட்டுரை: 

1969-ல் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா காலமாகி கருணாநிதி தமிழகக்திற்கு முதலமைச்சராய் தேர்வு ஆகிறார்.. நாவலர் நெடுஞ்செழியன், எம்ஜிஆர் போன்றோர் திமுகவில் உச்சகட்ட பிரபலங்களாக இருக்கிறாகள்.. ஆனால் அன்று முதலே கருணாநிதி ஒரு காரியத்தை வெகு சாமர்த்தியமாக செய்ய ஆரம்பித்தார். தன்னைச்சுற்றியே அரசியல் களம் இயங்க வேண்டும் என்பதுதான் அது..

எழுத்தாற்றலில் வல்லமை கொண்ட பத்திரிகையாளராகவும் திகழ்ந்த அவர், செய்திகளை எப்படி எழுதவேண்டும் என்பதைவிட நாமே எப்படி செய்தியாக மாற முடியும் என்ற வித்தையை நன்றாக கற்றறிந்திருந்தார்..

அதன் அடிப்படையில்தான், ஆதரவோ, எதிர்ப்போ, தன்னை மையப்படுத்தியே தமிழக அரசியல் களமும் மக்கள் மத்தியில் பேச்சும் இருக்கும்படி தொடர்ந்து கருணாநிதி பார்த்துக்கொண்டார்..

பாமர மக்கள் மத்தியில் அவ்வளவு செல்வாக்கு பெற்ற எம்ஜிஆர் 1977ல் முதலமைச்சராகி 1987ல் முதலமைச்சராகவே மறையும் வரையிலான 11 ஆண்டு காலகட்டம்… அப்போதுகூட செய்திகளில் எம்ஜிஆரை விட அதிகம் பேசப்பட்டவர், விமர்சிக்கப்பட்டவர் கருணாநிதியாகத்தான் இருக்கும்

எம்ஜிஆருக்கு பிறகு, ஜெயலலிதா வந்த பிறகும் கருணாநிதிதான் ஈக்வல் லெவலையும் தாண்டி லைம் லைட்டில் இருந்தார்.. கருணாநிதியே பேசாவிட்டாலும் ஜெயலலிதாவால்  விமர்சிக்கப்பட்டே தானாகவே கிடைத்த லைம் லைட்டில் அவர் மிதந்தார்.. கடந்த வருடம் உடல் நலம் மற்றும் முதுமைகாரணமாக தீவிர அரசியல் களத்தில் ஈடுபடமுடியாத கட்டம் வரும் வரை அதே நிலைமைதான்..

கருணாநிதி எப்படி தன்னை மையப்படுத்தி சாகச அரசியல் செய்தாரோ அதற்கு நிகராக அவரைப்போலவே லைம்லைட் சாகசம் படைத்திருக்கிறது ஜெயலலிதாவுக்கு பிந்தைய அதிமுக..

முதலில் ட்ரெயிலரை பார்த்துவிட்டு மெயின் பிக்சருக்கு போவோம்..

.கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி இரவு சுமார் பத்து மணிக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு என்று சொல்லி ஒரு ஆம்புலன்ஸ் அப்பல்லோ ஆஸ்பிட்டல் போனது.. அங்கு ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டது முதல், அப்பல்லோதான் எல்லா ஊடகங்களிலும் முழுநேர செய்தியானது. பொதுவாக ஒரு தலைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அவர் உடல் நலம் எப்படி தேறுகிறார் என்பதுதான் செய்தியாகும். ஆனால் ஜெயலலிதா விவகாரத்தில் அவரை யார் நேரில் பார்த்தார்கள் என்ற விஷயமே எல்லாவற்றையும் பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னுக்கு வந்து சகல விதத்திலும் பரபரப்பாக நடைபோட்டது. அதுவே தமிழகத்தின் தலையாய பிரச்சினையாகவும் ஆகிப்போனது.

பொறுப்பு ஆளுநர் வந்தாலும் சரி, அகில இந்திய காங்கிரசுக்கே துணைத்தலைவரா இருக்கிற ராகுல் காந்தி வந்தாலும் சரி, யாராவது நேரில் பார்த்தார்களா என்றே பெரிதும் பேசப்பட்டது..

யாரும் எதிர்பார்க்காத வகையில் டிசம்பர் நாலாந்தேதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மறுநாள் இரவு காலமானார்.. இதன்பிறகு நடந்தவற்றை ஒரு கணம் யோசித்து பாருங்கள்..அதிமுகவில் ஏற்பட்ட குழப்பங்களைபோல, தொடர் சம்பவங்களைப்போல இந்தியாவில் எந்த அரசியல் கட்சியிலும் ஏற்பட்டதில்லை..

ஜெயலலிதா மரணம்.. மூன்றாவது முறையாக ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராய் பதவியேற்கிறார்.. சசிகலா அதிமுக பொதுச்செயலாளராகிறார்.. கட்சியும் ஆட்சியும் ஒருவரிடத்திலே இருக்கவேண்டும் என தம்பிதுரை கலகத்தை ஆரம்பித்து வைக்கிறார்.. ஓபிஎஸ் ராஜினாமா செய்கிறார்.. தற்காலிக முதல்வராய் இருந்தபடியே சசிகலாவுக்கு எதிராக ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் தியான அரசியலை ஆரம்பிக்கிறார்.. உள்ளம் குமுறுகிறர்கள் அனைவருக்கும் மெரீனா தியான அரசியலை மைய பீடமாகிறது…

முதலமைச்சராய் பதவியேற்க தன்னை அழைக்கவேண்டும் என கவர்னரிடம் மன்றாட ஆரம்பிக்கிறார் சசிகலா.. கூவத்தூரில் எம்எல்ஏக்களை அடைத்துவைக்கிறார்கள்.. சசிகலா முதலமைச்சராக பதவியேற்பு விழாகூட பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் தயாராகிற அளவுக்கு போகிறது நிலைமை..

பொறுப்பு ஆளுநரோ, சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீடு தீர்ப்பு வந்தபின்பே முடிவு எடுக்க முடியும் என்ற கைவிரித்துவிடுகிறார்.. சசிகலா ஆளுநரை பார்த்து எதற்கும் ஒரு எல்லை உண்டு..ஒரு கட்டம்வரைதான் பொறுப்போம் என எச்சரிக்கிறார்..

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என உச்சநீதிமன்றம் சொல்கிறது. சசிகலா தண்டனை கைதியாக பெங்களுரு சிறையில் அடைக்கப்படுகிறார்..எடப்பாடி பழனிச்சாமி முதல் அமைச்சராக ஆக்கப்படுகிறார்.. ஒபிஎஸ் ஈபிஎஸ் என இரு அணிகள் தினந்தோறும் மோத ஆரம்பிக்கின்றன..

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், அமைச்சர் வீட்டில் ரெய்டு..வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து.. இரட்டை இலைச்சின்னம், கட்சியின் பெயர், கொடி ஆகியவை முடக்கம்… சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து அகற்றவும் ஜெயலலிதா மரணத்தில் உண்மைகளை வெளியே கொண்டுவரவும் எனச்சொல்லி ஓபிஎஸ் தர்மயுத்தத்தை தொடங்குகிறார்..

இரண்டு விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாமல் ஈபிஎஸ் அணி உள்ளுக்குள் ஜெர்க் ஆகி பயங்கரமாய் குலுங்குகிறது.. கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுவதால் சசிகலா குடும்பத்தினர் அதிமுகவை விட்டு விலகியிருக்கவேண்டும் என்று முதன் முறையாய் அமைச்சர் ஜெயக்குமார் கூறி பூகம்பத்தை ஏற்படுத்துகிறார். ஓபிஎஸ் ஈபிஎஸ் அணியோடு தினகரன் அணி என மூன்றாவதாக உருவாகி மும்முனை மோதலே பிரதானமாகிறது.. தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்படுகிறார்.

ஓபிஎஸ் அணி ஈபிஎஸ்சுடன் இணைகிறது.. ஓபிஎஸ் துணை முதலமைச்சர் ஆகிறார்.. பதவியேற்பு விழாவில் இருவரையும் சேர்த்துவைத்து ஆளுநர் சிரிக்கிறார்.. அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகிறார் ஓபிஎஸ்..

நாட்டிலேயே மிகப்பெரிய ரெய்டாக 1800 பேருடன் சசிகலா அன்ட்கோவுக்கு தொடர்புடைய 187 இடங்களில் வருமான வரித்துறை பல நாட்களாக பிரித்து மேய்கிறது.. கிளைமாக்சாக ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்திலேயே ரெய்டு.. இன்னொரு பக்கம் கடைசியில் இரட்டை இலை சின்னம் மீட்கப்படுகிறது.. கொடி, கட்சியின் பெயர் ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிக்கு கிடைக்கிறது..

அதிமுக என்பது ஒன்று இரண்டாகி இரண்டு மூன்றாகி மூன்று இரண்டாகி இப்போது தேர்தல் ஆணையத்தின் படி இப்போது மீண்டும் ஒரே கட்சி..அரசியல் களத்தில் தினகரன் தனி அணி..ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நோக்கி தமிழகம்..

நாம் மேலே பல சம்பவங்களை ஒரு வரி ஒரு வரியாகத்தான் சொன்னோம்.. இந்த ஒவ்வொரு வரியும் கடந்த ஒரு வருடத்தில் தினந்தோறும், நூறு பிரேக்கிங் நியூஸ்களாக மாறிமாறி சேனல்களில் 24 மணிநேரமும் ஓடிக்கொண்டிருந்தன..

பல இரவுகள் மக்களை தூங்கவிடாமல் பிரேக்கிங் நியூஸ் ஆக்கிரமித்தன.. வீடுகளில் டிவி சீரியல்களை மட்டுமே பார்க்கும் தாய்க்குலங்கள்கூட, பிரேக்கிங் நியூஸ் பக்கத்திற்கு தாவிவிட்டனர். ஆண்களுக்கு பிரேக்கிங் நியூஸ் கேட்காவிட்டாலோ பார்க்காவிட்டாலோ எதையோ பறிகொடுத்த மாதிரி தவிக்க ஆரம்பித்துவிட்டனர்..

மீண்டும் மீண்டும் நன்றாக யோசித்து பாருங்கள்,,, எல்லா பிரேக்கிங் நியூசுமே அதிமுக என்ற கட்சி விவகாரத்தை சுற்றித்தான்.. ஆட்சி நிர்வாகத்தை பற்றி அல்ல… மக்களின் கவனமெல்லாம் பேச்செல்லாம் விவாதமெல்லாம் அதிமுகவில் அடுத்து என்ன நடக்கும் என்பதை பற்றித்தான் இருந்தது..

 

அதிர்ச்சியோ ஆனந்தமோ, மக்கள் மத்தியில் தங்களைப்பற்றி மட்டுமே பேசவைத்தி ருப்பது எவ்வளவு சாமர்த்தியமான விஷயம்..

அரசின் செயல்பாடுகளை பற்றி கேள்விகளை மேலே வர விடாமல் அரசியல் நிலவர பரபரப்பு காட்சிகளிலேயே மக்களின் கவனத்தை கனக்கச்சிதமாய் வைத்திருக்கச் செய்தார்கள் அதிமுகவினர்..

சட்டசபையில் பலம் வாய்ந்த கட்சியாக இருக்கும் திமுக உட்பட தமிழகத்தின் பிரதான கட்சிகள் எத்தனையோ பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தாலும் ஊடகங்களில் அதிமுக உட்கட்சி பரபரப்புக்கு முன் எடுபடாமலேயே போய்விட்டது.. ஆட்சிக்கு எந்த சேதாரமும் இல்லாமல் இப்படியே ஒரு வருஷத்தை நெருங்கிவிட்டார்கள் அதிமுகவினர்… வாவ்..

கொஞ்சம் மோதினாலே வெடித்து சிதறும் விமானத்தை.. பல பாகங்களில் மோசமாக டேமேஜ் ஆகியும் அற்புதமாக லேண்டிங் செய்கிறார்கள்.. மறுபடியும் டேக் ஆப் செய்கிறார்கள்.. என்ன மாதிரியான வித்தை இது?

அவர்களுக்குள்ளேயே பிரிந்து அடித்துக்கொண்டார்கள்.. ஆனால் ஒரு எம்எல்ஏவோ, எம்பியோ நிர்வாகியோ கட்சி மாறவேயில்லை.. மற்ற கட்சிகள் வேடிக்கை மட்டுமே பார்க்கமுடிகிறது.. ‘அடிமைகள்’ என்று அவர்களை எல்லோரும் கிண்டலடிக்கிறார்கள்.. ஆனால் அந்த ‘அடிமைகள்’தான் தங்களுக்கென ஒரு காட்ஃபாதரை உருவாக்கிக்கொண்டு எவ்வளவு சாமர்த்தியமாக தமிழகத்தில் வெற்றிநடைபோட்டுக்கொண்டிருக்கின்றன..

தங்களை வைத்தே அரசியல் சுழலவேண்டும் என்ற வித்தையில் கருணாநிதிக்கு நிகராக ஒட்டுமொத்த அதிமுக தலைகளும் தேறிவிட்டுள்ளன என்றே சொல்லலாம்..

அதிமுகவினர் அவர்களுக்குள்ளே ஒருத்தருக்கொருத்தர் பயந்தார்கள்.. பயப்படுகிறார்கள்..ஆனால் தமிழகத்தில் அவர்கள் பயப்படாத ஒரே ஆள் அனேகமாக திமுக செயல்தலைவர் ஸ்டாலினாகத்தான் இருக்கும் போல் தெரிகிறது..

எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஜெயலலிதாவிடம் சொல்லப்படும் ஒரு பேமஸ் டயலாக்..’’நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்’’