சென்னை: மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் 3ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னாள் முதல்வர் மறைந்த மு.கருணாநிதியின் 3லது ஆண்டு நினைவுதினம் இன்று திமுகவினரால் கொண்டாடப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திமுகவினர் தங்களது பகுதிகளிலேயே கருணாநிதி உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்த திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி ஆங்காங்கே கருணாநிதி உருவப்படத்தை வைத்து திமுக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதி மலர்களாக பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டி ருந்தது. அதுபோல, கருணாநிதியின் கோபாலபுரம் மற்றும் சிஐடி காலனியிலும் கருணாநிதி படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
இன்று காலை திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து,. அமைச்சர்கள் துரைமுருகன், கனிமொழி எம்.பி., ஏ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் மற்றும் தி.மு.க.வினரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
பின்னர், கோபாலபுரம் இல்லம், சிஐடி காலனி இல்லத்திலும் கருணாநிதி படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், நம் நெஞ்சங்களில் நிறைந்து நம்மை இயக்கும் தலைவர் கலைஞரின் நினைவுநாள்! தலைவரை – தமிழன்னையின் தலைமகனை நாம் பிரிந்து மூன்றாண்டுகள் ஆகின்றது. அவரது சொற்களும் எண்ணங்களும் நம் திசைமானி; அவர் காட்டிய வழி நடப்போம்! சமத்துவ சமுதாயம் அமைப்போம்! என்று கூறியுள்ளார்.