உறவுகள்கவிதை பகுதி 10

கருமச்சங்கள்

பா. தேவிமயில் குமார்

 

உன் மடியில்

என்னைத் தாலாட்டிடு !

 

காதோடு கொஞ்சிடு

காதல் மொழி பேசிடு !

 

கண்களோடு, நம்

காலம் கடக்கட்டும் !

 

பட்டு நூல் கொண்டு

பக்கம் இழுத்திடு !

 

ராத்திரி பகலென இருவரும்

ரசித்திருப்போம் !

 

சம்யுக்தாவைப்போல

காத்திருக்கிறேன்,

காதலோடு !

காற்றாய் வந்து விடு ! எனை

கவர்ந்து சென்று விடு !

 

கரையான் அரிக்கிறது எனை

கனவுகள் கரைகிறது !

காலம் கடத்தாதே ! வா !

காதல் மொழிகள்,

கவிதை வரிகள்,

அகர முதல,

அறிவியல்,

போர்க்களம்,

பூக்கள்,

இறைவன்,

இதயம்,

புரட்சி,

பூமி என

பேசிடுவோம் வா !

 

உறங்கா

இரவுகளை

உன்னுடன் கழித்திட

வேண்டும் வருவாயா ?

 

பருவப் பெண்ணின்

பதைபதைப்பை போல்

பரிதவிக்கிறேன்,

உன் பார்வைக்காக !

 

ஒப்பனையோடு

உனக்காகக்

காத்திருக்கிறேன்

காதலனே வா !

 

என் அங்கமெங்கும்

எண்ணிட முடியா

கருமச்சங்கள் !

வரி வரியாய், என்னை

வாசித்திடு ! என் அன்பே !

 

வா இப்போதே

வாழ்க்கைத் தந்திடு !

தனிமையில் சந்தித்திடு !

தவிப்பைத் தணித்திடு !

தாமதிக்காதே !

 

என் இதயத் துடிப்பை

எண்ணிக் கொண்டிருக்கிறேன் !

உன் வருகையை

எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன் !

 

வா ! வந்து விடு !

வாரி அணைத்துக்கொள்

வாழ்ந்திடுவோம், வாழ்க்கையை

வாசித்துக் கொண்டே !

 

இப்படிக்கு

படிக்கப்படாத நூலக புத்தகங்கள்