பெங்களூரு:
கர்நாடகா அரசின் உணவு மற்றும் சிவில் சப்ளைஸ், நுகர்வோர் விவகாரத் துறை ஆணையராக பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரியான திவாரி உ.பி மாநிலம் லக்னோ சாலையில் கடந்த 17ம் தேதி மர்மமான முறையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். 2007ம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவரது மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜ கோரிக்கை விடுத்துள்ளது.
உணவுத் துறையில் நடந்த ஒரு ஊழல் தொடர்பாக திவாரி விசாரணை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்த கேள்விக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ யார் யாரோ கூறுவதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. விசாரணைக்கு முதலில் அனுமதிக்க வேண்டும். அதன் பிறகு எல்லாம் தெரிய வரும். விசாரணை க்கு கர்நாடகா அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கும்’’ என்றார்.
திவாரி மரணம் தொடர்பாக விசாரணை நடத்த உ.பி. காவல்துறை தனிப்படையை அமைத்துள்ளது. திவாரியின் தந்தை பி.என்.திவாரி கூறுகையில்,‘‘ எனது மகன் நேர்மையானவர். அதனால் சில ஊழல் அதிகாரிகளுக்கு அவரை பிடிக்காமல் போனது. இதில் யாரோ தான் அவரை கொலை செய்திருக்க வேண் டும்’ என்றார்.
திவாரி மரணம் குறித்த விபரங்களை சேகரித்து வருவதற்காக இரண்டு மூத்த அதிகாரிகளை கர்நாடகா அரசு உபி.க்கு அனுப்பி வைத்துள்ளது. சித்ரதுர்காவில் பாஜ தலைவர் எடியூரப்பா நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ 2 ஆயிரம் கோடி ரூபாய் ஊழலை திவாரி விசாரித்து கொண்டிருந்த சமயத்தில் அவர் கொலை செய்யப்பட் டுள்ளார் என்று அவரது சகோதரர் மாயாங் தெரிவித்துள்ளார். அதனால் இந்த விஷயத்தில் முதல்வர் நேரடியாக தலையிட வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்’’ என்றார்.
உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு பாஜ எம்பி சோபா கரன்ட்ல«ஜ் இந்த சம்பவம் தொடர்பாக 2 முறை கடிதம் எழுதியுள்ளார். திவாரியின் மரணத்திற்கு பின்னால் இருக்கும் சதியை விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.