“கர்நாடகாவில் தமிழ் பதிவெண்கள் கொண்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்படுவதாகவும், ஓட்டுனர்கள் தாக்கப்படுவதாகவும் வந்த செய்திகள் மிகைப்படுத்தப்பட்டவை. கர்நாடகாவில் காவல்துறை முழு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர்” என்று கர்நாடகாவில் வசிக்கும் பிரபல தமிழ் எழுத்தாளர் என். சொக்கன் தெரிவிக்கிறார்.
பெங்களூருவில் வசிக்கும் அவரை தொடர்புகொண்டு பேசினோம்.
அவர், “இரண்டு மூன்று இடங்களில் வாகனங்களை எரிப்பதும் தாக்குவதும் நடந்திருப்பது உண்மைதான். பெங்களூருவின் வெவ்வேறு எல்லைப்புற பகுதிகளில் நடந்த சம்பவங்கள் அவை. மற்றபடி பெங்களூரு உட்பட  கர்நாடக நகரங்களில் அமைதியான சூழலே நிலவுகிறது.
ஆனால் குறிப்பிட்ட அந்த இரண்டு சம்பவங்களை தொலைக்காட்சிகளில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிக்கொண்டே இருப்பதால் பெங்களூரு மக்கள் பதட்மாகிவிட்டார்கள். அங்குள்ள பள்ளிகளும், மாணவர்களை அழைத்துச் செல்லுமாறு பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்தன. இதையடுத்து தமிழர் மட்டுமின்றி மற்ற பெற்றோர்களும் பதட்டத்துடன் பள்ளிக்கு விரைந்து தங்களது குழந்தைகளை அழைத்துச் செல்ல குவிந்தார்கள்.

பெங்களூரு ( கோப்பு படம்)
பெங்களூரு ( கோப்பு படம்)

இது ஒட்டுமொத்தமாக பதட்டமான சூழலை ஏற்படுத்தி விட்டது.
“ முழு பாதுகாப்பு அளித்திருக்கிறோம். அமைதியாக இருங்கள் ” என்று சமூகவலைதளங்களில் கர்நாடக காவல்துறை தொடர்ந்து அறிவித்துக்கொண்டே இருந்தது
ஆனால் ஊடகங்களில் வெளியான குறிப்பிட்ட இரு காட்சிகள்… லாரிகளுக்கு தீ வைப்பது, காரை  உடைப்பது.. பார்த்த பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்துவிட்டார்கள். ஆகவே வேறு வழியின்றி மாலையில் தடை உத்தரவை பெங்களூரு காவல்துறை பிறப்பித்தது.
என். சொக்கன்
என். சொக்கன்

நகரில் ஆகப்பெரும்பாலும் அமைதியான சூழலே நிலவுகிறது. ஆனால் குறிப்பிட்ட இரு துர்ச்சம்பவங்களை மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவதால் ஏற்படும் பாதகங்களை ஊடகங்கள் சிந்திக்க வேண்டும்.
இவற்றை தொடர்ந்து பார்க்கும் கன்னட இளைஞர்கள் தூண்டப்பட ஏதுவாகும். இன்னொரு புறம், கர்நாடகம் முழுதும் தாக்குதல் என்று நினைத்து பதில் விளைவாக தமிழகத்தில் கன்னடர்கள் தாக்கப்படும் நிலை ஏற்படும்.
ஆகவே உண்மை நிலையை மட்டும் ஊடகங்கள் வெளிப்படுத்தினால்  அனைவருக்கும் நல்லது” என்ற வேண்டுகோளுடன் முடித்தார் எழுத்தாளர் என். சொக்கன்.