பெங்களூரு

ப்ஜி விளையாட்டுக்கு அடிமையான ஒரு மாணவர் தனது பொருளாதார தேர்வில் அது குறித்து விவரித்து எழுதியதால் தோல்வி அடைந்துள்ளார்.

மாணவர்களிடையே தற்போது பப்ஜி விளையாட்டு மிகவும் பரவி உள்ளது. பல மாணவர்கள் அந்த விளையாட்டுக்கு அடிமையாகி உள்ளனர். ஒரு தீவுக்கு செல்லும் வீரர்கள் அந்த தீவை கைப்பற்ற எதிரி வீரர்களுடன் சண்டையிட்டு கொல்வதாக உள்ள இந்த விளையாட்டு மாணவர்கள் மத்தியில் வன்முறையை தூண்டுவதாக பெற்றோர்களும் ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.

இந்த விளையாட்டு குஜராத் மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த கோரிக்கைக்கு வலுவூட்டும் சம்பவம் ஒன்று கர்நாடகாவில் நடந்துள்ளது.

பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான வருண் என்னும் மாணவர் கர்நாடகாவை சேர்ந்தவர் ஆவார். இவர் தனது பொருளாதாரப் பாட தேர்வின் போது விளையாட்டு மும்முரத்தில் படிக்காமல் இருந்துள்ளார். இவர் மொபைலை வைத்துக் கொண்டிருப்பதை கண்ட பெற்றோர்கள் கேள்விகள் எழுப்பி உள்ளனர். ஆனால் வருண் தனது நண்பர்களுடன் தேர்வு குறித்து கலந்துரையாடுவதாக சொல்லி அவர்களை நம்ப வைத்துள்ளார்.

அடுத்த நாள் தேர்வில் வருணுக்கு ஒரு கேள்விக்கும் விடை தெரியவில்லை. அதனால் அவர் தனது விடைத் தாளில் பப்ஜி விளையாட்டை எப்படி டவுன் லோடு செய்வது என்பதில் தொடங்கி முழுமையாக விவரித்துள்ளார். இந்த விடைத்தாளை திருத்திய ஆசிரியை மிகவும் கோபம் கொண்டுள்ளார். இந்த தேர்வில் தோல்வியுற்ற வருணின் பெற்றோரிடம் நடந்ததைக் கூறி உள்ளார்.

இது குறித்து வருண், “அந்த விளையாட்டு என்னை ஈர்த்ததால் நான் தேர்வுக்கு படிக்காமல் விளையாடி விட்டேன். இவ்வாறு வினாத்தாளில் அந்த விளையாட்டை விவரித்தது எனது தவறுதான்.   தற்போது என்னிடம் இருந்து எனது பெற்றோர் மொபைலை பிடுங்கி வைத்துள்ளனர். ஆயினும் எனது கண் முன்னே அந்த விளையாட்டு பிம்பங்களே வந்து போகின்றன” என தெரிவித்துள்ளார்.