பெங்களூரு

ர்னாடகா மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஜாதி பாகுபாடின்றி அனைத்து மடாதிபதிகளும் போட்டியிடும் எண்ணத்தில் உள்ளனர்.

கர்னாடகா மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் வெகு விரைவில் நடைபெற உள்ளது.    அதையொட்டி கட்சித் தலைவர்கள் பரப்புரையை தொடங்கி நடத்தி வருகின்றனர்.   அதே நேரத்தில் வேட்பாளராக நிற்க அனைத்துக் கட்சியிலும் கடும் போட்டி உண்டாகி உள்ளது.  பாஜகவை சேர்ந்த யோகி ஆதித்யநாத் உத்திரப் பிரதேசத்தில் வென்று முதல்வரானதால் பல மடாதிபதிகளும் அரசியலில் இறங்கும் எண்ணத்தில் உள்ளனர்.

லட்சுமிவாரா தீர்த்த சாமி

உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண மடத்தின் கீழ் உள்ள எட்டு மடங்களில் ஒன்றான ஷுரூர் மடாதிபதி லட்சுமிவாரா தீர்த்த சாமி உடுப்பி தொகுதியில் நிற்கப்போவதாக தெரிவித்துள்ளார்.    பாஜக சார்பில் நிற்க விரும்பும் அவருக்கு  முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ரகுபதி பட் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.   அதையொட்டி பாஜக தனக்கு வாய்ப்பளிக்கவில்லை எனில் சுயேச்சையாக நிற்கப் போவதாக மடாதிபதி கூறி உள்ளார்.    ஷுரூர் மடாதிபதியின் இந்த முடிவு  மற்ற ஏழு மடாதிபதிகளிடையே அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

உடுப்பி மட்டுமின்றி மங்களூர் அருகே உள்ள வஜ்ரதேகி மடத்தின் மடாதிபதி ராஜசேகரானந்த சாமியும் மங்களூர் வடக்கு தொகுதியில்  போட்டியிட விருப்பம் தெரிவுத்துள்ளார்.    அவர், “மடாதிபதிகள் தேர்தலில் போட்டியிடக் கூடாதா?  அப்படி ஒன்றும் தடி இல்லையே.   மக்கள் சேவை செய்வதில் மற்றவர்களை விட மடாதிபதிகள் மட்டமானவர்கள் அல்ல.” எனக் கூறி உள்ளார்.

மதர சென்னையா சாமி

இவர்கள் இருவரும் பிராமண இனத்தை சேர்ந்த மடாதிபதிகள் என்னும் வேளையில் மற்றொரு தலித் மடாதிபதியும் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக கூறி உள்ளார். மதர சன்னையா சாமி என்னும் தலித் மடாதிபதி சித்திரதுர்கா மாவட்டத்தின் ஹோலல்கெரே என்னும் தனித்தொகுதியில் போட்டியிட பாஜகவை அணுகி உள்ளார்.    தனக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக சமிபத்தில் நடந்த அமித்ஷாவின் பொதுக்கூட்டத்தை இவர் முன்னின்று நடத்தி உள்ளார்.

லிங்காயத்துகளின் மடாதிபதியான பசவானந்தா சாமியும் தார்வார் அருகில் உள்ள கலகலாகி சட்டப்பேரவையில் போட்டியிட ஆசை தெரிவித்துள்ளார்.   அவரும் பாஜக சார்பில் தற்போதைய காங்கிரஸ் அமைச்சர் சந்தோஷ் லாட் ஐ எதிர்த்து போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

மடாதிபதிகள் காங்கிரஸ் கட்சியையும் விட்டு வைக்க வில்லை.    மற்றொரு லிங்காயத் மடாதிபதி பிரபு சன்னபசவா சாமி அதானி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட முயற்சி செய்து வருகிறார்.   இவர் பாஜக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான லட்சுமண் சவாடியை எதிர்த்து  போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.