பெங்களூரு
கர்நாடகாவில் கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 50,600 கன அடி காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாகக் கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி மற்றும் ஹாரங்கி அணைகள் நிரம்பி விட்டன, ஹேமாவதி மற்றும் கே ஆர் எஸ் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
நேற்று மாலை124.80 அடி உயரமான கே ஆர் எஸ் அணையில் 108 அடி வரை நீர் நிரம்பி இருந்தது. விநாடிக்கு 29,855 அடி நீர் அணைக்கு வந்துக் கொண்டு இருந்தது. இதனால் அணையில் இருந்து விநாடிக்கு 4,715 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கபினி அணை கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரம் கொண்டதாகும். இது முழுமையாக நிரம்பி நேற்று மாலை 2280.65 அடி உயரம் வரை நீர் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 38,766 கன அடி நீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 50,600 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கபினி உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிவதால் நதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கரையோர கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.