பெங்களூரு: நாட்டிலேயே பணக்கார எம்எல்ஏ என்ற பெயர் பெற்ற கர்நாடகாவின் அதிருப்தி எம்எல்ஏ நாகராஜின் சொத்து மதிப்பு 18 மாதங்களில் ரூ. 185 கோடி அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சியில் இருந்த போது அமைச்சராக இருந்தவர் நாகராஜ். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் உள்பட 17 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
அவர்களின் தகுதி நீக்கம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. அவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்றும் அனுமதி அளித்தது. இதையடுத்து, அந்த 17 பேரும் பாஜகவில் இணைந்தனர். 17 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
இந் நிலையில், ஹொஸ்கோதே தொகுதி முன்னாள் எம்எல்ஏவான நாகராஜ் தற்போது பாஜக வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். அதற்காக அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் தலையை சுற்ற வைக்கிறது.
அந்த பத்திரத்தின் அடிப்படையில் கணக்கிட்டால் கடந்த முறையைவிட (அதாவது 18 மாதங்களில்) அவருக்கு 185 கோடி ரூபாய் சொத்துகள் கூடியிருக்கின்றன. அதிலும் ஆக. 2 முதல் 7ம் தேதி வரையான 53 வங்கி டெபாசிட்டுகளின் மதிப்பு மட்டுமே ரூ. 48 கோடி.
18 மாதங்களில் அவரின் சொத்து மதிப்பில் இதன் பங்கு மட்டுமே 25.84 சதவீதம். அதாவது 4ல் ஒரு பங்கு ஆகும். அவருக்கும், அவரது மனைவிக்கும் இருக்கும் சொத்து மதிப்பு ரூ.1201.50 கோடி.
2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தின் அடிப்படையில் ஒப்பீட்டு அளவில் பார்த்தால் 15.5 சதவீதம் சொத்தின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அசையும் சொத்துகளின் மதிப்பு மட்டும் 104.53 கோடி அதிகரித்துள்ளது.
மனைவியின் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.44.95 சதவீதம் உயர்ந்துள்ளது. பிரமாண பத்திரத்தில் உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ. 4,19,28,63.731 ஆகும்.
காங்கிரசில் இருந்து நாகராஜ் விலகி பாஜகவில் சேர, பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்காக 50 கோடி ரூபாய் தனியாக நிதி கொடுத்தார் என்று தகவல்கள் வெளியாகின.