பெங்களூரு: ஆபாச வீடியோ விவகாரத்தில், கர்நாடக பாஜக அரசின் நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி ராஜினாமா செய்ததையடுத்து, தங்கள் மீது அவதூறு பரப்பும் வகையிலான எந்தவித விஷயத்தையும் வெளியிடுவதிலிருந்து ஊடகங்களுக்கு தடைவிதிக்க வேண்டுமென, அம்மாநிலத்தின் 6 கேபினட் அமைச்சர்கள் சிட்டி சிவில் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு ஆட்சி நடைபெறுகிறது. எடியூரப்பா அரசு பதவியேற்றது முதலே, மாநில அமைச்சர்கள் குறித்து பல சர்ச்சைகள் வட்டமிடுகின்றன.

இந்நிலையில், அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சராகவுள்ள ரமேஷ் ஜர்கிஹோலி தொடர்பான ஏடாகூட வீடியோக்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின. இதன் உஷ்ணம் தாங்காமல், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதனையடுத்து, அம்மாநிலத்தின் எஸ்.டி.சோம சேகர், ஷிவராம் ஹெப்பார், பி.சி.பட்டீல், டாக்டர்.சுதாகர், நாராயண கெளடா மற்றும் பைரட்டி பசவராஜூ ஆகிய 6 கேபினட் அமைச்சர் சிட்டி சிவில் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

அதாவது, தாங்கள் தொடர்பான எந்த அவதூறான வீடியோவோ அல்லது உள்ளடக்கமோ, அச்சு ஊடகங்களிலோ அல்லது வேறெந்த வகையிலோ ஒலி-ஒளிபரப்பு செய்யப்படாமல் தடைவிதிக்க வேண்டுமென நீதிமன்றத்தை அணுகியுள்ளனர் அமைச்சர்கள்.

மாநில கேபினட் அமைச்சர்களின் இந்த செயல், அரசியலில் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.