பெங்களூரு

கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் மந்திரிகள் மற்றும் எம் எல் ஏக்கள் விதான் சவுதா வளாகத்தில் போராட்டம் நடத்தி உள்ளனர்.

சிறப்பு விசாரணை குழு கர்நாடக மாநிலத்தில் மகரிஷி வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தில் ரூ.187.3 கோடி ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.  இந்த மோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா பெயரை வாக்குமூலத்தில் அளிக்குமாறு மாநில சமூக நலத்துறை உதவி இயக்குநரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தியதாக அவர் புகார் அளித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து 2 அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கர்நாடக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  காங்கிரஸ் கட்சி இந்த ஊழல் வழக்கில் முதல்வர் சித்தராமையாவை சிக்க வைக்க வேண்டும் என அமலாக்கத்துறை செயல்படுகிறது என்று குற்றம்சாட்டியது.

இதையொட்டி, கர்நாடக சட்டசபை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அமலாக்கத்துறைக்கு எதிராக முதல்வர் சித்தராமையா தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் குறிப்பாக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், உள்துறை மந்திரி பரமேஸ்வரா உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர்.

துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம் இதுகுறித்து,

“சமூக நலத்துறை உதவி இயக்குநரை ஊழல் விவகாரத்தில் முதல்வருக்கு தொடர்பு இருப்பதாக கூறச் சொல்லி வற்புறுத்திய அமலாக்கத்துறைக்கு எதிராக இன்று அமைச்சர்கள் உள்பட அனைத்து எம் எல் ஏக்களும் போராட்டம் நடத்தி வருகிறோம். சமூக நலத்துறை ஊழல் வழக்கை பொறுத்தவரை சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணைக்கு ஒத்துழைப்பதற்காக ஒரு அமைச்சரே ராஜினாமா செய்தார்.

சிறப்பு விசாரணைக் குழு ஏற்கனவே 50 சதவீதம் தொகையை மீட்டுள்ளதுடன், நிறைய பேரை கைது செய்துள்ளது.

இந்நிலையில்விசாரணையில் ஈடுபட்டுள்ளஅமலாக்கத்துறை அதிகாரிகள், சமூக நலத்துறை உதவி இயக்குநரை வற்புறுத்தி, இந்த வழக்கில் முதல்வர் சம்மந்தப்பட்டுள்ளார் எனக் கூறவைக்க முயன்றுவருகின்றனர். ஏற்கனவே அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளால் நான் குறிவைக்கப்பட்டேன். என்னை  சிபிஐ துன்புறுத்தி என் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது..”

என்று கூறி உள்ளார்.