பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பீமண்ணா நாயக் வீட்டில் இன்று வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருப்பவர் பீமண்ணா நாயக், இவர் சிர்சி சித்தாபுரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரது வீட்டில் இன்று காலை முதல் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
என்ன காரணத்திற்காக இந்த சோதனை நடைபெறுகிறது என்பதை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இதையடுத்து அவரது வீட்டு முன்பு ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
ஏற்கனவே, எதிர்க்கட்சியினரை வருமான வரித்துறை மற்றும் சிபிஐ கொண்டு மோடி தலைமையிலான மத்திய மிரட்டி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், அதை மெய்ப்பிப்பது போலவே, தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், கர்நாடக காங்கிரஸ் வேட்பாளர் வீட்டில், அவரது செயல்பாடுகளை முடக்கும் வகையில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது அரசியல் பழி வாங்கும் செயல் என்றும், பாரதியஜனதா அரசு தனது மிரட்டல் ஆட்டத்தை கர்நாடகவில் ஆரம்பித்து உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.