பெங்களூரு சின்னசாமி மைதானத்தின் வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க (KSCA) நிர்வாகிகள் மீது காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருந்தனர்.

ஆர்.சி.பி. அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தை திடீரென அறிவித்தது மட்டுமன்றி எந்தவித முன்னேற்பாடுகள் குறித்தும் கவலைகொள்ளாமல் செயல்பட்டது தொடர்பாக KSCA மீது குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் கிரிக்கெட் ரசிகர்களை தங்கள் பக்கம் ஈர்க்க மாநில அரசும் போட்டி நடவடிக்கையில் இறங்கியதுடன் விதான் சவுதா அருகே ஆர்.சி.பி. அணி வீரர்களை அழைத்து கௌரவித்தது.

இதையடுத்து அரசியலாக்கப்பட்ட இந்த வெற்றிக் கொண்டாட்டம் அதன் பின் நடைபெற்ற அசம்பாவிதத்தை தொடர்ந்து பூதாகரமாக வெடித்தது.

இந்த நிலையில் KSCA தலைவர் ரகுராம் பட், செயலாளர் ஏ. சங்கர், பொருளாளர் இ.எஸ். ஜெயராம் ஆகியோர் தங்கள் மீதான எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தனர்.

நீதிபதி கிருஷ்ண குமார் தலைமையிலான அமர்வு இன்று பிற்பகல் இந்த வழக்கை விசாரித்தது.

மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அசோக் ஹர்னஹள்ளி, ஷியாம் சுந்தர், அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சஷி கிரண் ஷெட்டி ஆகியோர் ஆஜராகினர்.

கர்நாடக காவல்துறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஈவென்ட் மேலாண்மை நிறுவனமான டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (கேஎஸ்சிஏ) மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கில், அடுத்த விசாரணை வரை எந்த அதிகாரி மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுதுடன் வழக்கின் விசாரணையை ஜூன் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மார்க்கெட்டிங் தலைவர் நிகில் சோசலே தாக்கல் செய்த தனி மனுவையும் விசாரித்த நீதிமன்றம், வழக்கின் விசாரணையை ஜூன் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

அதேவேளையில்,ஆர்சிபியின் சந்தைப்படுத்தல் மற்றும் வருவாய்த் தலைவர் நிகில் சோசலே, டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் சுனில் மேத்யூ மற்றும் கிரண் குமார் உள்ளிட்ட நான்கு பேர் இன்று காலை பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணைக்காக தடுத்துவைக்கப்பட்டதாகவும் பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.