பெங்களூரு: அரசியல் பேரணிகளின்போது முகக்கவசம் அணியாத தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட இதர அரசியல் தலைவர்களிடம் அரசு அபராதம் வசூலித்ததா? என்று கேள்வியெழுப்பியுள்ளது கர்நாடக உயர்நீதிமன்றம்.
அரசியல் நிகழ்வுகளில் முகக்கவசம் அணிவதை வலியுறுத்தி, லெட்ஸ்கிட் பவுண்டேஷன் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
கடந்த செப்டம்பர் 30ம் தேதி, பெங்களூரு தெற்கு தொகுதி மக்களவை உறுப்பினர் பாரதீய ஜனதாவின் தேஜ்ஸ்வி சூர்யாவை வரவேற்க, விமான நிலையத்தில் திரண்ட கூட்டத்தில், கொரோனா தொடர்பான சமூக அறிவுரைகள் பின்பற்றப்படாதது அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை, தலைமை நீதிபதி அபாய் ஓகா மற்றும் நீதிபதி விஷ்வஜித் ஷெட்டி அடங்கிய அமர்வு விசாரித்தது.
மேற்கண்ட அரசியல் நிகழ்வில், மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி உள்ளிட்ட யாரும் முகக்கவசம் அணியவில்லை மற்றும் சமூக இடைவெளியையும் பின்பற்றவில்லை என்றுகூறி, அவர் அரசு வழிகாட்டுதல்களை மீறிவிட்டதாக வழக்கறிஞர் ஜி ஆர் மோகன் படங்களை இணைத்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம், “முகக்கவசம் அணியாமல், விதிமுறைகளை மீறியதற்காக மக்களவை உறுப்பினர் மற்றும் இதர அரசியல் தலைவர்களிடம் மாநில அரசு அபராதம் வசூலித்ததா? இதன்மூலம் அரசு மக்களுக்கு சொல்ல வருவது என்ன?
அந்த நிகழ்வில் விதிமுறை மீறல் இருந்ததற்கான புகைப்படங்கள் இருந்தும், காவல்துறை தரப்பில் எதற்காக உண்மை மறைக்கப்படுகிறது?” என்று கேட்டுள்ளது நீதிமன்றம்.