பெங்களூரு
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மீது வழக்கு விசாரணைக்கு கர்நாடலா உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பாஜக அமலாக்கத்துறையை வைத்து தொழிலதிபர்களை மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆதர்ஷ் என்பவர் அளித்த புகாரில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா உள்ளிட்டோரின் தூண்டுதலின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க பெங்களூருவில் உள்ள மக்கள் பிரிதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதையடுத்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா, கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா, முன்னாள் தலைவர் நளின்குமார் கட்டீல் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவர்கள் மீது பணமோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் வசூலித்த புகாரில் கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனா்.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தேர்தல் பத்திர பணம் வசூலிப்பு வழக்கிற்கு இடைக்கால தடை விதிக்க கோரி மனுதாக்கல் செய்யப்பட்டு மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி எம். நாகபிரசன்னா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதி இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.