பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக எந்தநேரத்திலும் இந்திய தாக்குதல் ஏற்படலாம் என்ற பீதியில் பாகிஸ்தான் உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் இருந்து தக்காளி ஏற்றுமதியை நிறுத்தப்போவதாக தக்காளி விவசாயிகள் தீர்மானித்துள்ளனர்.

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் மீது பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டுள்ளது.

சிந்து நதி நீர் விநியோகத்தைத் தடுப்பது உட்பட பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது, மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான கிட்டத்தட்ட அனைத்து வர்த்தக உறவுகளும் நிறுத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தானை ராஜதந்திர ரீதியாக பழிவாங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் மருந்து உள்ளிட்ட அன்றாடத் தேவைகளுக்குப் போராட வேண்டியுள்ளது.

அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே கடந்த சில நாட்களாக பல கூட்டங்களை நடத்தியுள்ளார்.

இதற்கிடையில், பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், தற்போது கர்நாடகாவின் கோலாரில் உள்ள விவசாயிகளும் பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளனர். பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதி செய்வதற்கு முழுமையான தடை விதித்து கோலார் விவசாயிகளும் வியாபாரிகளும் தீர்மானித்துள்ளனர்.

ஆசிய கண்டத்திலேயே இரண்டாவது பெரிய தக்காளி சந்தை என்ற பெருமையை கோலார் ஏபிஎம்சி சந்தை பெற்றுள்ளது. அதே காரணத்திற்காக, கோலார் மாவட்டத்தில் விளையும் தரமான தக்காளி நாட்டின் பெரும்பாலான மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் கூட ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள் தக்காளி அறுவடைக்கான மாதங்கள். இந்த காலகட்டத்தில், கோலாரில் இருந்து தக்காளி பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கோலாரில் இருந்து ஆண்டுதோறும் 800 முதல் 900 டன் தக்காளி பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், கோலார் விவசாயிகள் பாகிஸ்தானுக்கு தக்காளியை விற்று கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்து வந்தனர்.

இந்த நிலையில் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இனி ஒரு தக்காளியை கூட பாகிஸ்தானுக்கு அனுப்ப மாட்டோம் என்று கோலார் விவசாயிகளும் வணிகர்களும் கூறியுள்ளனர்.

கோலாரில் இருந்து பாகிஸ்தானுக்கு தக்காளி சப்ளை செய்வதற்கு முழுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது, மேலும் எக்காரணம் கொண்டும் பாகிஸ்தானுக்கு தக்காளி சப்ளை செய்வதில்லை என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதன்மூலம் நஷ்டமடைந்தாலும் பரவாயில்லை ஆனால் பாகிஸ்தானுக்கு தக்காளியை மட்டும் அனுப்ப மாட்டோம் என்று அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

பாகிஸ்தானுக்கு தக்காளி மட்டுமல்ல, பிற காய்கறிகளும் அனுப்பப்பட்டு வந்த நிலையில் கோலார் விவசாயிகளின் இந்த முடிவு பாகிஸ்தானுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.