பெங்களூரு: மேகதாது அணை கட்டும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டதாக கர்நாடாக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 2024-25ஆம் ஆண்டுக்கான 15வது பட்ஜெட்டை கர்நாடக சட்டப்பேரவையில், முதல்வர் சித்தராமையா பிப்ரவரி 16ந்தேதி அன்று பொதுபட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது மத்திய அரசின் அனுமதியை பெற்று விரைவில் மேகதாது அணை கட்டப்படும் எனவும், அணைகட்டும் பணிகளை மேற்கொள்ள பிரத்யோக தனித் திட்டப் பிரிவும், இரண்டு துணைப் பிரிவுகளும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. நிலத்தை கண்டறிய கணக்கெடுப்பு மற்றும் மரங்களை எண்ணும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். இது தமிழ்நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு திமுக உள்பட எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.

இதைத்தொடர்ந்து, பெங்களூரில் கடுமையான குடிதண்ணீர் தட்டுப்பாடு என்றும், அதை போக்க காவிரி தண்ணீரை கொண்டுவர மேகதாதுவின் அணை கட்டப்பட வேண்டும் என அம்மாநில கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதற்கிடையில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலில் கவனம் செலுத்தி வருகின்றன.  திமுக வெளியிட்ட  தேர்தல் அறிக்கையிலு,  மேகதாது அணை கட்டும் கர்நாடகா அரசின் முயற்சி தடுத்து நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,  டெல்டா மாவட்ட விவசாயிகளின் இன்னல்களை போக்க மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக உறுதியான சட்ட நடவடிக்கையை திமுக மேற்கொள்ளும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  கர்நாடக மாநில  காங்கிரஸ் தலைவரும், மாநில துணை முதலமைச்சருமான  டி.கே.சிவக்குமார்,  திமுக சொல்வது அவர்களிடம் திட்டம். அது தமிழ்நாட்டில் அவர்கள்  செய்யும் அரசியலுக்கான நிலைப்பாடு என்று விமர்சனம் செய்தவர் ஆனால் நாங்கள் ஏற்கனவே மேகதாது அணை கட்ட சட்டப்பூர்வமான பணியை தொடங்கிவிட்டோம் என அவர் தெரிவித்ததுடன்,  தான் அமைச்சராக பதவி ஏற்றதே,  மேகதாதுவை அமைப்பதற்காகத்தான் என்று கூறினார்.

மேலும் பேசியவர், மேகதாது அணை கர்நாடகாவுக்கு மட்டுமல்ல. நாடு முழுவதற்கும்  பொதுவானது என்று கூறிய டி.கே.சிவகுமார்,  காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திலும் நீதிமன்றத்திலும் கர்நாடகாவுக்கு நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு  177 டிஎம்சி தண்ணீர் தருவோம் என்றும் கூறினார்.

திமுகவும்,காங்கிரசும் எதிர்க்கட்சகிளின் இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.  இரு கட்சிகளுடன் தோழமை உணர்வுடன் மேகதாது அணை விஷயத்தை அணுகாமல், தங்களின் அரசியல் லாபத்துக்காக, விவசாயிகள் மற்றும் காவிரி பாசன வாக்காளர்களை ஏமாற்றும் விதமாக திமுக அரசும்,  கர்நாடகா அரசும்,  மேகதாது அணை கட்டுவோம் என்றும், தடுப்போம் என்று மாறி மாறி கூறி மக்களை வஞ்சித்து  வருகிறது.