பெங்களூரு :
புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் சொந்த மாநிலங்களுக்கும் சொந்த மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்க மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டு வரும் அதே வேளையில்.
கடந்த இரண்டு மாதமாக வேலையின்றி ஒரு ரூபாய் கூட சம்பாதிக்க முடியாமல், பசி, பட்டினியில் இருக்கும் இந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து செல்ல ரயில்களில் கட்டணம் வசூலிக்கப்படுவதையும், அதிலும் சிறப்பு கட்டணம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை பல்வேறு தரப்பினர் கண்டித்து வருகின்றனர்.


தொழிலாளர் நலனுக்காக இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாத மத்திய அரசு இதுபோன்ற இக்கட்டான சூழலில் அவர்களை இலவசமாக அழைத்து செல்வதற்குப் பதில் அவர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கையை கைவிடவேண்டும் என்று கூறிவருகின்றனர்.
இதுபோல், கர்நாடக பா.ஜ.க. அரசு மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெங்களூரில் வந்து வேலைசெய்யும் தொழிலாளர்களை தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்க இருப்பதாக அறிவித்தது. அப்படி செல்ல விரும்புவோர், பெங்களூரில் இருந்து தாங்கள் செல்லவிருக்கும் இடத்திருக்கான போக வர (இரு வழி) கட்டணம் செலுத்த வேண்டும் என்று போக்குவரத்து கழகம் முதலில் அறிவித்தது, இதற்கு எதிர்ப்பு வலுக்கவே, முதல்வர் எடியூரப்பா ஒரு வழி கட்டணம் மட்டும் வசூலிக்க படும் என்று கூறினார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார், ஒரு வழி கட்டணம் என்ற பெயரில் உயர்த்தப்பட்ட சிறப்பு கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றம் சாட்டிய டி.கே. சிவகுமார், ஏழை எளிய மக்களை இதுபோன்ற சமயங்களில் வாட்டி வதைக்கும் பா.ஜ.க. அரசை கண்டித்ததோடு, இந்த தொழிலாளர்களுக்காக கர்நாடக காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒரு கோடி ரூபாயை கர்நாடக போக்குவரத்து துறை இயக்குனரிடம் வழங்கி, இவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.


1 கோடி ரூபாய் நிதியை அளித்துவிட்டு, பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய டி.கே. சிவகுமார், இந்த பணம் கட்சி முன்னோடிகள் பலரும் நன்கொடையாக கொடுத்த பணம், இதுபோன்ற நேரங்களில் இவர்களுக்கு உதவாதவர்கள் பின் எப்போதுதான் உதவுவார்கள் என்று கர்நாடக பா.ஜ.க.வை சேர்ந்த 25 எம்.பி. களையும் குற்றம்சாட்டினார்.
வீடியோ இணைப்பு …