பெங்களூரு: 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெங்களூரு தமிழ்ப் பள்ளியை புணரமைக்க முன்வந்த கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ முன்வந்துள்ளார். பள்ளிக்கு தேவையான கட்டிடங்களை கட்ட அடிக்கல் நாட்டினார்.
பெங்களூரு சிவாஜிநகர் திம்மையா ரோட்டில் 100 ஆண்டுகள் பழமையான அரசு தமிழ் உயர் ஆரம்ப பள்ளி உள்ளது. இந்த பள்ளி போதிய வசதியின்றி பல ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது. இந்த தமிழ்ப்பள்ளியை மேம்படுத்துவதில், தமிழக அரசியல் கட்சிகளோ, மாநில அரசோ ஆர்வம் காட்டாத நிலையில், அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் ஹர்ஷத் முன்வந்துள்ளார்.
தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 100 ஆண்டுகள் பழமையான தமிழ் பள்ளியை புணரமைக்க உதவி செய்துள்ளார். பள்ளிக்கு புதிய கட்டிடம் மற்றும் கால்பந்து மைதானம் அமைக்க நிதி உதவி வழங்கியதுடன், அதற்கான அடிக்கல் நாட்டு விழா பூமி பூஜையும் வெற்றிகரமாக நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் ஹர்ஷத் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றியும், பூமி பூஜையும் செய்தும் புதிய கட்டிட கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது, மேடையில் இருந்த சர்வக்ஞர், திருவள்ளுவரின் உருவப்படத்திற்கு ரிஸ்வான் ஹர்ஷத் எம்.எல்.ஏ. மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய ஹர்ஷத் எம்.எல்.ஏ.. நான் எம்.எல்.ஏ.வாக உள்ள சிவாஜிநகர் தொகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க தமிழ் பள்ளி இருப்பது பெருமையாக உள்ளது. ஆனால் இந்த பள்ளி தற்போது சிதிலமடைந்து உள்ளது. இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று நினைத்தேன். இதுபற்றி எல் அன்ட் டி நிறுவனத்தின் இணை பொது மேலாளர் ஸ்ரீதரிடம் பேசினேன். அவரும் புதிய கட்டிடம் கட்டி தருவதாக உறுதி அளித்து, எல் அன்ட் டி ஒத்துழைப்புடனும், எனது எம்.எல்.ஏ. நிதியில் இருந்தும் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கு வந்து பார்த்தபோது பள்ளி மைதானம் முழுவதும் குப்பை கழிவுகள் குவிந்து கிடந்தது. கழிவுநீரும் தேங்கி கிடந்தது. அதை பார்க்க வேதனையாக இருந்தது. தற்போது இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. கூடிய விரைவில் புதிய கட்டிடத்தை கட்டி தரும்படி ஸ்ரீதருக்கு கோரிக்கை விடுக்கிறேன். மேலும் மாணவர்களுக்கு விளையாட்டு மீது உள்ள ஆர்வத்தால் இங்கு கால்பந்து மைதானம் அமைக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் எல் அன்ட் டி நிறுவன இணை பொது மேலாளர் ஸ்ரீதர், காந்திநகர் பிளாக் காங்கிரஸ் தலைவர் சரவணா, பாரதிநகர் பிளாக் காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரா, முன்னாள் கவுன்சிலர்கள் ஆனந்தகுமார், சகீல் அகமது, பள்ளியின் தலைமை ஆசிரியை கலைவாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.