தாவண்கரே

லிங்காயத்து மடாதிபதியான வசனாநந்தாவுக்கும் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கும் பொது மேடையில் வாக்குவாதம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள தாவண்கரே நகரில் லிங்காயத்து சமூகத்தினரின் ஒரு பிரிவான பஞ்சமாஷாலி சமுதாய மாநாடு நடந்தது   இந்த மாநாட்டில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா,  மற்றும் அமைச்சர் பசவராஜ் பொம்மை, பஞ்சமாஷாலி மடாதிபதி வசனாநந்தா சாமி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.   அந்த மாநாட்டில் வசனாநந்தா சாமி சிறப்புரை ஆற்றினார்.

வசனாநந்தா சாமி தனது உரையில், தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் முருகேஷ் நிரானிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் எனவும் அவ்வாறு வழங்காவிட்டால் தங்கள் சமுதாயம் முதல்வரைப் புறக்கணித்து விடும் எனவும் கூறினார்.   மேலும் அவர் எடியூரப்பா ஆட்சி நீடிக்க வேண்டுமெனில் அமைச்சரவையில் குறைந்தது 3 பஞ்சமஷாலி அமைச்சர்கள் இடம் பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதனால் எடியூரப்பா மிகவும் ஆத்திரம் அடைந்தார்.  வசனாநந்தா உரையாற்றும் போது சட்டென்று எழுந்து, “நீங்கள் இது போலப் பேச வேண்டாம்.  என்னை முதல்வராக்க 17 பேர் தங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியைத் தியாகம் செய்துள்ளனர்.    அவர்களுக்கு என்னால் துரோகம் இழைக்க முடியாது.    இதெல்லாம் ஒருவருடன் ஒருவர் பேச வேண்டிய விஷயம்.   பொது மேடையில் பேசக் கூடாது.   நான் உங்களுக்குத் தேவை இல்லை எனில் நான் விலகி விடுகிறேன்” எனக் கூறினார்.

அத்துடன் அவர் அந்த மேடையில் இருந்து வெளியேற முயன்றார்.   அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்த பிறகு முதல்வர் அமைதியானார்.   பொது மேடையில் ஒரு மடாதிபதி முதல்வரை மிரட்டுவது போல் பேசியது மக்களிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.