பெங்களூர்:
கர்நாடக சட்டசபையில், இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி வெற்றி பெற்றார். அவருக்கு ஆதவராக 117 வாக்குகள் கிடைத்தன.
ஆனால், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் பாரதியஜனதா கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
கர்நாடகவில் உள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று முடிந்தது. ஆனால் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நடைபெற்றது.
இந்நிலையில், பாரதியஜனதாவின் அதிகாரமீறல் மற்றும், கவர்னரின் சூழ்ச்சிகளை முறியடித்து, காங்கிரஸ் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் குமாரசாமி முதல்வராக பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
தற்போதுள்ள 222 எம்எல்ஏக்களில், 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்வர் குமாரசாமியின் ஒரு தொகுதி மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்ட நிலையில், தற்போதைய பலம் 221. இதன் காரணமாக பெரும்பான்மை நிரூபிக்க 111 பேர் ஆதரவு இருந்தாலே போதுமானது. 37 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு, 78 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்தது. இதன் காரணமாக இந்த கூட்டணி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 115 ஆக கூடியது. மேலும் சுயேச்சைகள் 2 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் கர்நாடக சட்டசபையில் முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பை தீர்மானத்தை தாக்கல் செய்தார். ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் பாரதியஜனதா வெளிநடப்பு செய்தது.
இதையடுத்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்வர் குமாரசாமி ஆதவராக 117 வாக்குகள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
குமாரசாமி வெற்றி பெற்றதை தொடர்ந்து காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள்.