கன்னடத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 777 சார்லி, கிரண்ராஜ் இயக்கத்தில் ரக்ஷித் ஷெட்டி, சங்கீதா சிருங்கேரி நடித்துள்ள இந்தப்படத்தை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று பார்த்தார்.
பெங்களூரு ஓரியன் மாலில் உள்ள பி.வி.ஆர். திரையரங்கில் பிரத்யேக காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தப் படத்தில் சார்லி என்ற நாய் முக்கிய பங்கு வகித்துள்ளது.
படத்தில் சார்லி வரும் காட்சிகளை பார்த்த முதல்வர் பசவராஜ் பொம்மை சமீபத்தில் இறந்து போன அவரது வளர்ப்பு நாய் தியா-வை நினைத்துக் கொண்டார்.
இதனால் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட அவர் தனது நாயை நினைத்து கண்ணீர் விட்டார்.
பிறகு, இந்தப் படத்தில் நாயும் மனித உறவும் மிகவும் நுட்பமாக எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
படத்தின் டிரெய்லரை பார்த்து விட்டு இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று விரும்பியதாக கூறிய பசவராஜ் பொம்மை இந்தப் படத்தில் விலங்குகளுடன் பழகுவது குறித்த செய்தி இருக்கிறது என்று கூறினார்.
மேலும், கர்நாடகாவில் தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் சிறப்பு திட்டம் ஒன்றை அமல்படுத்தப்போவதாக அறிவித்துள்ளார்.