பெங்களூரு

பிரதமர் மோடிக்கு கர்னாடகா முதல்வர் சித்தராமையா நான்கு கேள்விகளை தனது டிவிட்டர் பக்கத்தில் கேட்டுள்ளார்.

இந்த வருடம் மே மாதம் கர்னாடகா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  அதை ஒட்டி நேற்று பெங்களூருவில் பாஜக பிரம்மாண்ட பொதுக் கூட்டம் ஒன்றை நிகழ்த்தியது.  அதில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர், “பாஜக ஆட்சிக்கு வந்தால் ஊழல் அடியோடு ஒழிக்கப்படும்.    இந்த மாநிலத்துக்கு மத்திய அரசு தாராளமாக உதவிகள் செய்யும்.   காங்கிரஸ் கலாச்சாரம் நாட்டில் இருந்து முழுவதுமாக ஒழிக்கப்படும்”  என கூறி இருந்தார்.

அதற்கு பதிலாக கர்னாடகா முதல்வர் சித்தராமையா  பிரதமர் மோடிக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் 4 கேள்விகளை கேட்டுள்ளார்.   அவர் தனது பதிவில், “ பிரதமர் மோடியின் ஊழல் குறித்த பேச்சுக்கு எனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.   நான் உங்களுக்கு 4 கேள்விகள் கேட்கிறேன்.

முதல் கேள்வியாக நீங்கள் லோக்பால் அமைப்பை இதுவரை ஏன் அமைக்கவில்லை?  அதை முதலில் அமையுங்கள்.

இரண்டாவதாக சொராபுதீன் கொலை வழக்கை விசாரணை செய்த நீதிபதி லோயாவின் மர்ம மரணம் பற்றி ஏன் விசாரிக்கவில்லை?  அதற்கு ஒரு விசாரணை கமிஷன் அமையுங்கள்.

மூன்றாவதாக பாஜக தலைவர் அமித்ஷா வின் மகனின் சொத்துக்கள் திடீரென வளர்ச்சி அடைந்தது குறித்து உங்கள் கருத்து என்ன?  அது குறித்து விசாரியுங்கள்.

நான்காவதாக கர்னாடகா மாநிலத்தின் பாஜக வேட்பாளராக கறைபடியாத ஒருவரை நியமிப்பீர்களா?  அதை செய்யுங்கள் “ என பதிந்துள்ளார்.