பெங்களூரு:
பெங்களூரில் கடந்த திங்கள்கிழமை மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது அல்லவா. இது காவிரி நதிநீர் விவகாரத்திற்கான போராட்டம் என பலரும் எண்ணியிருந்த நிலையில். உண்மை அதுவல்ல என்பது தெரிய வந்திருக்கிறது.
பெங்களூரு கலவரத்துக்குக் காரணம், கொள்ளையடிக்கும் நோக்கமும் பழிவாங்கும் திட்டங்களுமே என்று ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கர்நாடகாவில் விற்பனையில் முதலிடம் வகிக்கும் ‘விஜய் கர்நாடகா’ நாளிதழ் இந்த தகவல்களை ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கிறது.
கலவர நேரத்தில் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் நகர வீதிகளில் சுற்றியிருக்கிறார்கள். இது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இதை பார்த்த நகர குற்றப்பிரிவு போலீசார் அதிர்ந்துபோனார்கள். போராட்டக்காரர்கள் கையில் கத்தி எதற்கு என்பது அவர்கள் கேள்வி. சிசிடிவி காட்சிகளில் உள்ளவர்கள் ரவுடிகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சமூக விரோதிகளின் நோக்கம், கொள்ளை மற்றும் தனிப்பட்ட விரோதத்தை தீர்ப்பது மட்டுமே. உதாரணத்திற்கு, ஒரு நிறுவனத்திற்குள் புகுந்த கலவரக்காரர்கள், உரிமையாளர் முன்னிலையில் அவரது ஆட்டோவை தீ வைத்து எரித்த்துள்ளனர். பின்னர், அவரிடம், பிற பொருட்களையும், கடையையும் எரிக்காமல் இருக்க பணம் தர வேண்டும் என பேரம் பேசியுள்ளனர்.
நிறுவன உரிமையாளர் ரூ.2 லட்சம் தர ஒப்புக்கொண்டுள்ளார். அந்த பணத்தை பெற்றுக்கொண்டு கலவர கும்பல் அமைதியாக வெளியேறுகிறது. இந்த காட்சிகள் நிறுவன சிசிடிவி காட்சிகளில் அப்பட்டமாக பதிவாகியுள்ளது. இதுவும் போலீஸ் கைக்கு சேர்ந்துள்ளது.
இன்னொரு சம்பவம். கிரிநகர் பகுதியிலுள்ளது ஏ.வி.மசாலா புட்ஸ் பிரைவேட் லிமிடட். இந்த நிறுவனத்திற்குள் 200 பேர் கொண்ட கும்பல் நுழைந்து தீ வைத்துள்ளது. மசாலா நிறுவனத்திற்குள் இருந்த மசாலா பொருட்களை மூட்டை மூட்டையாக கட்டிக்கொண்டு தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இதன் பின்னணியில் தனிப்பட்ட விரோதமும் உள்ளது.
அந்த ஏரியா ரவுடிகள் சிலர், விநாயகர் சதுர்த்தியின்போது, விழா செலவுக்கு இந்த நிறவனத்திடம் ஒரு லட்ச ரூபாய் கேட்டுள்ளனர். அந்த நிறுவனத்தார் மிகக் குறைந்த தொகையே தந்திருக்கிறார்கள். அந்த கோபத்தை, கலவரம் என்ற பெயரில் தீர்த்துக்கொண்டார்கள், ரவுடிகள்.
சிசிடிவி காட்சிகள், டிவி சேனல் காட்சிகள், பத்திரிகை புகைப்படங்கள், சமூக வலைத்தள காட்சிகளை கொண்டு கிரிமினல்களை அடையாளம் கண்டு கைது செய்துவருகிறது கர்நாடக போலீஸ். பல கிரிமினல்கள், திங்கள்கிழமை கலவரத்தை நடத்தி முடித்து, அன்று இரவே வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளது என்பதையும் அந்த நாளிதல் வெளியிட்டுள்ளது.